புதுச்சேரியில் ஒமிக்ரான் வேகமெடுக்கிறது

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக 10க்கு கீழ் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 2,086 பேருக்கு பரிசோதனை செய்ததில் 22 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று காலை 10 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 562 பேருக்கு பரிசோதனை செய்ததில் 27 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா அதிகரிக்க தொடங்கியிருக்கும் நிலையில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பும் அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்தவர்களில் `எஸ்-ஜெனி-டிராப்’ என்ற தன்மையுடன் இருப்பவர்களின் உமிழ்நீர் பெங்களூருவில் உள்ள ஒமிக்ரான் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 7ம் தேதி அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளின் முடிவு கடந்த 28ம் தேதி வந்தது. அதில் 80 வயது முதியவர், 20 வயது இளம்பெண் என 2 பேருக்கு ஒமிக்ரான் இருந்தது தெரியவந்தது.

அதேபோல், கடந்த 4, 5 நாட்களில் கொரோனா பாதித்த நபர்களின் மாதிரியை பரிசோதித்ததில் 11 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி தென்பட்டுள்ளது. இதில் 40 சதவீதம் பேருக்கு, அதாவது 4 முதல் 5 பேருக்கு ஒமிக்ரான் இருக்க வாய்ப்புள்ளது என தெரிகிறது. புதுச்சேரி கடற்கரை புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இதில் பலரும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தனர். இதனால் தொற்று பாதிப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Related Stories: