×

ரூ.3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜேந்திரபாலாஜி கோலாரில் பதுங்கல்? தனிப்படையினர் கர்நாடகாவில் தேடுதல் வேட்டை

விருதுநகர்: வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலம் கோலாருக்கு தப்பிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  அதனை தொடர்ந்து கர்நாடக மாநிலம் சென்றுள்ள தனிப்படை போலீசார், கோலார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.3.10 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 4 பேர் மீது 5 பிரிவுகளில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவான ராஜேந்திரபாலாஜியை, பல மாநிலங்களிலும் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் தலைமையிலான 8 தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

அதிமுக முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள் செல்போன் எண்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையில் இணையதளம் மற்றும் மாவட்ட எஸ்பி மனோகரிடம் புகார் அளித்த 7 பேர் மற்றும் சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், ராஜேந்திரபாலாஜி உதவியாளர் சீனிவாசன், அதிமுக மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ராஜசிம்மன் மற்றும் இருவரிடம் மதுரை சரக டிஐஜி காமினி, எஸ்பி மனோகர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் விசாரணை நடத்தினர்.

ராஜேந்திரபாலாஜியுடன் தொடர்பில் இருந்ததாக கருதப்படும் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் விக்னேஷ்வரன், கோடியூர் இளம்பெண்கள் பாசறை நகர செயலாளர் ஏழுமலை, தர்மபுரி முன்னாள் அமைச்சரின் உதவியாளர் பொன்னுவேல், கார் டிரைவர் ஆறுமுகம் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து வந்தனர். விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் 4 பேரையும் போலீசார் விடுவித்தனர். விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், போலீசாரிடம் சிக்காமல் ராஜேந்திரபாலாஜி தப்பி வருகிறார். அவர் நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலம் கோலாருக்கு தப்பிச் சென்றதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கர்நாடகா சென்றுள்ள தனிப்படை போலீசார், கோலார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.தனிப்படை போலீசார் கூறுகையில், ‘‘ராஜேந்திரபாலாஜி ஐபோன்களில் விசேஷ ஆஃப் மூலம் பேசி வருகிறார்.  தினமும் ஒவ்வொரு செல்போன் எண்ணில் இருந்து வழக்கறிஞருடன் பேசுகிறார். அவர் பதுங்கியுள்ள இடத்தை கண்டுபிடித்து, அங்கு செல்வதற்குள், அவருக்கும் தகவல் கிடைத்து விடுகிறது. உடனே அவர் வேறு இடத்திற்கு தப்பி விடுகிறார். இப்போது கோலாரில் அவர் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை தேடி வருகிறோம்’’ என்றனர்.

* ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு புகார்
விருதுநகர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிவகாசி அறிஞர் அண்ணா காலனியை சேர்ந்த சங்கர்கணேஷ் நேற்று புகார்மனு அளித்தார். அதுபற்றி அவர் கூறியதாவது: திருத்தங்கல் நகராட்சி பகுதியில் எனது தாத்தா சங்கரலிங்கத்திற்கு 67 சென்ட் பூர்வீக நிலம் இருந்தது. நிலத்தை அவரின் 4 மகன்களின் வழி பேரன், பேத்திகள் என 12 பேருக்கு 1992ல் உயில் சாசனம் எழுதி 8.7.1992ல் திருத்தங்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். இதில் இறந்த 2 பேர் உயிருடன் இருப்பதாக சான்று கொடுத்து திருத்தங்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தை அதிமுக நகர செயலாளர் சக்திவேல் உறவினர்கள் பெயரில் பதிவு செய்துள்ளனர். இதற்கு உறுதுணையாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் இருந்தனர். அதிகாரத்தை பயன்படுத்தி போலியான ஆவணங்கள் தயாரித்து, இறந்தவர்களை உயிருடன் இருப்பதாக சான்றளித்து பதிவு செய்துள்ளனர். 2019 முதல் புகார்கள் அளித்து வரும் நிலையில் மிரட்டி வருகின்றனர். எனவே தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உட்பட 9 பேர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத் தரவேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Rajendrapalaji ,Kolar ,Karnataka , Rajendrapalaji, who is in hiding in a Rs 3 crore fraud case, is hiding in Kolar? Individuals search hunt in Karnataka
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!