திருவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து பலியான 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வழிவிடுமுருகன் (40). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை திருவில்லிபுத்தூர், களத்தூர் அருகே நாகலாபுரத்தில் உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 அறைகள் இடிந்து விழுந்து குமார் (38), பெரியசாமி (55), செல்வம் என்ற வீரக்குமார் (40) மற்றும் முருகேசன் (35) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக நத்தம்பட்டி போலீசார், பட்டாசு ஆலை உரிமையாளரான வழிவிடுமுருகன் மீது, இந்திய வெடிபொருள் சட்டத்தின் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர்.

தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவில்லை என்பதால், இந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து, விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி நேற்று உத்தரவிட்டுள்ளார். இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம், களத்தூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் நான்கு பேர் இறந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா மூன்று லட்சமும், காயமுற்றவர்களுக்கு தலா ஒரு லட்சமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories: