ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த புதிய யுத்தி தனது நாட்டு ராணுவ வீரர்களை தீவிரவாதிகளாக அனுப்பும் பாக்.: எல்லையில் ஊடுருவ முயன்றபோது சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதியை போல் ஊடுருவ முயன்ற, பாகிஸ்தான் ராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் கடந்தாண்டு பிப்ரவரியில் இருந்து சண்டை நிறுத்த ஒப்பந்தம் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், எல்லை வழியாக ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ, பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டு உளவுத்துறையான ஐஎஸ்ஐ.யும் தொடர்ந்து உதவி வருகின்றன. அவற்றின் முயற்சிகளையும் தனது தீவிர கண்காணிப்பால் இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.  அதேபோல், ஜம்மு காஷ்மீரிலும் தீவிரவாதிகளை தினமும் வேட்டையாடி வருகிறது. இதனால், உள்ளூரில் இருந்து செயல்படும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இந்நிலையில்,  தனது நாட்டு ராணுவ வீரர்களையே தீவிரவாதிகள் போல் காஷ்மீருக்குள் அனுப்பும் பாகிஸ்தானின் புதிய சதி நேற்று அம்பலத்துக்கு வந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் குப்வாராவுக்கு உட்பட்ட கெரன் பகுதி எல்லையில் இந்திய ராணுவம் நேற்று அதிகாலை வழக்கமான கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தது. அப்போது, பாகிஸ்தானில் இருந்து எல்லை கட்டுப்பாட்டு கோடு வேலியை  தாண்டி ஒருவர் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சிப்பதை இந்திய வீரர்கள் கண்டனர். அவரை திரும்பி செல்லும்படி எச்சரித்தனர். ஆனால், அவர் திரும்பி செல்வது போல் நடித்து விட்டு, மீண்டும் வேறு பகுதியில் ஊடுருவ முயன்றார். உடனே, இந்திய வீரர்கள் அவரை சுட்டுக் கொன்றனர். முதலில் அவரை தீவிரவாதிதான் என நினைத்தனர். அவருடைய உடலை மீட்டு சோதனை நடத்தியதில், பாகிஸ்தானின் தேசிய அடையாள அட்டையும், அந்நாட்டு சுகாதார துறையால் அளிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி சான்றிதழும் சிக்கின.

அதில், அவர் பாகிஸ்தான் எல்லை படையின் சீருடையில் காணப்படுகிறார். அவருடைய பெயர் முகமது ஷபீர் மாலிக் என அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவரிடம் இருந்து ஏகே ரக நவீன துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தனது நாட்டில் இருந்து அனுப்பப்படும் தீவிரவாதிகள், காஷ்மீரில் தொடர்ந்து கொல்லப்படுவதால் விரக்தி அடைந்துள்ள பாகிஸ்தான் ராணுவம், தனது நாட்டு வீரர்களேயே தீவிரவாதிகளை போல் காஷ்மீருக்குள் அனுப்புவது அம்பலமாகி இருக்கிறது.

* உடலை எடுத்து செல்ல அழைப்பு

எல்லையில் கொல்லப்பட்டவர் ராணுவ வீரர் என்பதால், சர்வதேச விதிமுறையின்படி அவருடைய சடலத்தை எடுத்து செல்லும்படி பாகிஸ்தான் ராணுவத்துக்கு, குப்வாரா பகுதியின் இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் பென்தர்கர் தகவல் அனுப்பி உள்ளார்.

Related Stories: