×

2வது டெஸ்ட் இன்று தொடக்கம் தொடரை கைப்பற்ற இந்தியா முனைப்பு: தென் ஆப்ரிக்காவுக்கு நெருக்கடி

ஜோகன்னஸ்பர்க்: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் 2வது டெஸ்ட் போட்டி, வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சுரியனில் நடந்த முதல் டெஸ்டில் 113 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் ஜோகன்ன்ஸ்பர்கில் இன்று தொடங்குகிறது. தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்கும் முனைப்புடன் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

தொடக்க வீரர்கள் ராகுல், மயாங்க் நல்ல பார்மில் உள்ளனர். கோஹ்லி, ரகானே, பன்ட் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறிப்பாக, புஜாரா கணிசமாக ரன் எடுத்தால் மட்டுமே அணியில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. பும்ரா- ஷமி வேகக் கூட்டணி தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் சிம்ம சொப்பனமாக இருக்கும். சிராஜ், ஷர்துல் அல்லது உமேஷ் ஆகியோரும் நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றனர். அஷ்வின் ஆல் ரவுண்டராக அசத்துவார் என எதிர்பார்க்கலாம். மொத்தத்தில், தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் தொடரை கைப்பற்ற இந்தியா வரிந்துகட்டுவதால், எல்கர் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணி மிகப் பெரிய சவாலை எதிர்கொள்கிறது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் குவின்டன் டி காக் திடீரென அறிவித்ததும் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. அவருக்கு பதிலாக இளம் வீரர் ரியான் ரிக்கில்டன் (25 வயது) அறிமுகமாக உள்ளார். காயம் அடைந்துள்ள வியான் முல்டருக்கு பதிலாக டுவேன் ஆலிவியர் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது. வாண்டரர்ஸ் மைதானம் இந்திய அணிக்கு ராசியானது என்பதும் தென் ஆப்ரிக்காவுக்கு கவலை தரும் அம்சம் தான். ரபாடா, என்ஜிடி பந்துவீச்சு எடுபட்டால் மட்டுமே இந்திய பேட்ஸ்மேன்களை ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும். வரலாற்று சாதனை படைக்க இந்தியாவும், செஞ்சுரியன் தோல்விக்கு பதிலடி கொடுக்க தென் ஆப்ரிக்காவும் முனைப்புடன் உள்ளதால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா: கோஹ்லி (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), மயாங்க் அகர்வால், செதேஷ்வர் புஜாரா, ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், அஜிங்க்யா ரகானே, விரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஜெயந்த் யாதவ், பிரியங்க் பாஞ்ச்சால், உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, இஷாந்த் ஷர்மா. தென் ஆப்ரிக்கா: டீன் எல்கர் (கேப்டன்), தெம்பா பவுமா (துணை கேப்டன்), காகிசோ ரபாடா, சரெல் எர்வீ, பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, கேஷவ் மகராஜ், லுங்கி என்ஜிடி, எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், கீகன் பீட்டர்சென், ராஸி வாண்டெர் டுஸன், கைல் வெரெய்ன், மார்கோ ஜான்சென், கிளென்டன் ஸ்டர்மேன், பிரனெளன் சுப்ராயன், சிசந்தா மகலா, ரியான் ரிக்கிள்டன், டுவேன் ஆலிவியர்.

Tags : India ,Crisis ,South Africa , India set to win 2nd Test series starting today: Crisis for South Africa
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...