சாரா அலிகான் நடிக்கும் இந்தி படத்தில் என் வாகன நம்பரை பயன்படுத்துவதா? இந்தூர் போலீசில் விநோத புகார்

இந்தூர்: விக்கி கவுஷல், சாரா அலிகான் இணைந்து நடிக்கும் பாலிவுட் படத்தின் ஷூட்டிங் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகர் பகுதியில் நடந்தது. அப்போது படமாக்கப்பட்ட ஒரு காட்சியில், இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு செல்லும் விக்கி கவுஷலுக்கு பின்னால் சாரா அலிகான் அமர்ந்திருந்தார். இக்காட்சியை வீடியோ எடுத்த சிலர், அதை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். அதில், விக்கி கவுஷல் ஓட்டிக்கொண்டு செல்லும் இருசக்கர வாகன நம்பர் பிளேட் எண்ணும், தனது இருசக்கர வாகன நம்பர் பிளேட் எண்ணும் ஒன்றாக இருப்பதாக சொல்லி, ஜெய்சிங் யாதவ் என்பவர் இந்தூர் பங்கங்கா போலீசில் புகார் அளித்தார்.

அதில், ‘எனது வாகனத்தின் நம்பர் பிளேட் எண்ணை சட்டவிரோதமாக பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். இக்காட்சியில் பயன்படுத்தப்படும் வாகன எண், எனது சொந்த வாகனத்தின் எண் ஆகும். எனது அனுமதியின்றி என் வாகனத்தின் எண்ணை பயன்படுத்தியதால், உடனே படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். படப்பிடிப்பு நடத்தியவர்களுக்கு இவ்விஷயம் தெரியுமா, தெரியாதா என்று எனக்கு தெரியாது. ஆனால், இது சட்டவிரோத செயல். எனவே, எனது புகாரை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும், தனது பைக் நம்பர் பிளேட்டின் போட்டோவை போலீசிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த புகாருக்கு பதிலளித்த இந்தூர் பங்கங்கா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரா, ‘ஜெய்சிங் யாதவ் என்பவர் புகார் அளித்துள்ளார். நம்பர் பிளேட் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரிப்போம். மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். முன்னதாக சம்பந்தப்பட்டவர்களை காவல் நிலையம் வரவழைத்து விசாரிப்போம்’ என்றார். விநோதமான இந்த புகாருக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Related Stories: