×

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டேன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: நடிகர் வடிவேலு பேட்டி

சென்னை: பல வருட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படம், ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. இப்படத்தின் பணிகளுக்காக லண்டன் சென்று திரும்பிய அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், தற்போது நன்கு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், நேற்று வடிவேலு அளித்த பேட்டி: எத்தனையோ தடைகளை தாண்டி மக்களின், ரசிகர்களின் ஆசிர்வாதத்தால் வீடு திரும்பியிருக்கேன். ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்துக்காக லண்டனுக்கு போனேன். ஏற்கனவே ரெண்டு தடுப்பூசி போட்டுட்டேன். லண்டன் போய் சேர்ந்ததும், அங்கேயும் ஒரு ஊசியை போட்டாங்க. லண்டன்ல இருந்து இந்தியாவுக்கு பிளைட் ஏறும் வரைக்கும் எதுவும் இல்லை. வர்ற வழியிலதான் எவனோ பரப்பி விட்டுட்டான். போன டிசம்பர் 23ம் தேதி சென்னை ஏர்போட்டுல இறங்குன உடனே, ‘வாங்க... வந்து ஒரு டெஸ்ட் எடுங்க சார்’னு சொன்னாங்க. நானும் நம்பி போனேன்.

அதுக்கு பிறகு, ‘உங்களுக்கு வந்திருச்சு சார்’னு சொல்லி, என்னை ஆம்புலன்சுல கூட்டிக்கிட்டு போனாங்க. கடலை கிழிச்சுக்கிட்டு ‘போட்’ போற மாதிரி ரோட்டுல ஆம்புலன்ஸ் வேகமா போச்சு. ஆம்புலன்ஸ் சைரன் சத்தமே பீதிய கிளப்புச்சு. கூட வந்தவங்க, ‘சார்... பயப்படாதீங்க. தைரியமா இருங்க’ன்னு, நான் டயலாக் பேசுன மாடுலேஷன்ல சொல்லி பயமுறுத்தினாங்க. ஆம்புலன்ஸ் சத்தம் போட்டுக்கிட்டு போறதை பலமுறை பாத்திருக்கேன். நானே ஆம்புலன்சுல போனது இப்பதான். போரூர்ல இருக்கிற ஆஸ்பத்திரிக்கு போய் சேர்ந்த முப்பதாவது நிமிஷத்துல, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போனில் பேசினார். ‘எப்படி இருக்கீங்க வடிவேலு? நீங்க தமிழ்நாட்டின் சொத்து. பத்திரமா இருங்க. காய்ச்சல் வந்தா டாக்டர் கிட்ட சொல்லுங்க. பயப்படாதீங்க. நாங்க இருக்கோம்’ னு தைரியம் சொன்னார். அவர் பேசினவுடனே எனக்குள்ள ஒரு ‘பவர்’ வந்திருச்சு. நல்லவங்க, கெட்டவங்க, எதிரிங்கன்னு எல்லாருக்குமே அவர்தான் முதலமைச்சர். அவரே என்கிட்ட நேரா பேசினதை இப்ப நினைச்சாலும் நெகிழ்ச்சியா இருக்கு. அவருக்கு என் நன்றி. வெற்றிநாயகன் குரலை கேட்டுட்டேன். இனி எனக்கு எப்பவுமே வெற்றி... வெற்றி... வெற்றி தான்.

எனக்கு ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க்கு சாப்புடுற மாதிரின்னு ஒரு படத்துல சொன்னேன். எனக்கு வந்த ரிஸ்க்கையும் ரஸ்க்காத்தான் எடுத்துக்கிட்டேன். அதைத்தான் மக்கள்கிட்டேயும் சொல்றேன். ரிஸ்க்கை ரஸ்க் சாப்புடுற மாதிரி ஈசியா எடுத்துக்குங்க. ஆனாலும் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. தடுப்பூசி போட்டுக்குங்க. மாஸ்க் போட்டுட்டு வெளியில போங்க. மத்தவங்க கிட்ட பேசுறப்ப, எச்சில் வெளியில தெறிக்காத மாதிரி தள்ளி நின்னு பேசுங்க. ஒமிக்ரான் வைரஸ் வேகமா பரவுதுன்னு சொல்றாங்க. முக்கியமா, குழந்தைங்களுக்கும் பரவுதுன்னு சொல்றாங்க. அதனால, ரொம்ப ரொம்ப பத்திரமா இருங்க. 2020, 2021 ரொம்ப மோசமான காலகட்டமா இருந்திச்சு. அதை சமாளிச்சு வந்த மாதிரி, இனிமேலும் சமாளிச்சு வருவோம். எனக்கு கொரோனா வந்த பிறகு, என்னை பிடிக்காதவங்களுக்கும் என்னை ரொம்ப பிடிச்சு போச்சு. அவங்களும் எனக்காக பிரார்த்தனை பண்ணாங்க. எல்லா மதத்து ஜனங்களும் எனக்காக பிரார்த்தனை பண்ணாங்க.

என்னோட ரசிகர்கள், ‘கொரோனா... என் தலைவன் வடிவேலு கிட்டேயே மோதுறியா?’ ன்னு கேட்டு அதையும் காமெடியாக்கினாங்க. மீம்ஸ் கிரியேட்டர்கள் ரொம்ப புத்திசாலிங்க. என் டயலாக்கை போட்டு கொரோனாவை பயமுறுத்தினாங்க. என் காமெடியை வெச்சு மக்களை சிரிக்க வையுங்க, சிந்திக்க வையுங்க. தயவுசெய்து யாரையும் தாக்கி மீம்ஸ் போடாதீங்கன்னு அவங்களை கேட்டுக்குறேன். எல்லாரும் பாதுகாப்பா இருங்க. கடவுளை வணங்குங்க. இயற்கையை நம்புங்க. கடவுள்தான் இயற்கை. இயற்கைதான் கடவுள். இவ்வாறு வடிவேலு கூறினார். மேலும் அவர் கூறும்போது, ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் திரைக்கு வரும் என்று தெரிவித்தார். ஜாக்கிரதையா இருங்க. தடுப்பூசி போட்டுக்குங்க. மாஸ்க் போட்டுட்டு வெளியில போங்க.

Tags : Tamil Nadu ,Chief Minister ,MK Stalin ,Vadivelu , I have recovered from corona damage Thanks to Tamil Nadu Chief Minister MK Stalin: Interview with actor Vadivelu
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...