×

சுசீந்திரம், நாமக்கல் கோயில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்; பக்தர்கள் குவிந்தனர்

நாகர்கோவில்: குமரி மாவட்டம் சுசீந்திரம் மற்றும் நாமக்கல் உள்பட தமிழகத்தில் உள்ள அனுமன் கோயில்களில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று நடக்கிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் ஆலயமான சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் 18 அடி உயர விஸ்வரூப தரிசன ஆஞ்சநேயர் உள்ளார். இங்கு வழக்கம் போல் இந்த ஆண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நேற்று (1ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

பின்னர் பல்வேறு பூஜைகள் நடந்தன. ஆஞ்சநேயர் ஜெயந்தியான இன்று (2ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயர் சன்னதி எதிரே உள்ள ராமபிரான், சீதாதேவிக்கு சிறப்பு சோடஷ அபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 8 மணி முதல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு அபிஷேகங்கள் தொடங்கின. நல்லெண்ணெய், பால், தயிர், சந்தனம், குங்குமம், களபம், மஞ்சள், விபூதி, அரிசி மாவு, பன்னீர், எலுமிச்சை பழச்சாறு, கரும்புச்சாறு, மாதுளைச்சாறு, பஞ்சாமிர்தம், தேன் ஆகிய 16 வகையான பொருட்களால் சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணி வரை அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அதிகமாக இருந்தது. கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நெரிசலை சமாளிக்கும் வகையில் கோயிலில் 4 வாசல்களும் திறக்கப்பட்டு இருந்தன. பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்காக சுமார் 50 ஆயிரம் லட்டுகள் வரை தயாரிக்கப்பட்டு இருந்தன. வடையும் வழங்கினர். அபிஷேகத்துக்காக ஆயிரக்கணக்கான லிட்டரில் பால், தயிர் கொண்டு வரப்பட்டு இருந்தது. மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி இன்று மாலை ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு புஷ்பாபிஷேகம் தொடங்குகிறது.

நாமக்கல்

நாமக்கல் கோட்டையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகுவிமரிசையுடன் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டு 1 லட்சத்து 8 வடைமாலை சாற்றும் அனுமன் ஜெயந்தி பெருவிழா இன்று நடந்தது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு ஆராதனை நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒரு மணி நேரத்துக்கு 500 பக்தர்கள் மட்டும் சமூக இடைவெளியுடன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 10 மணி வரை ஆஞ்சநேயரை பக்தர்கள் வடைமாலை அலங்காரத்தில் தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜெயந்தி விழாவையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் 2 டன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று இரவு 10 மணி வரை சுவாமியை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


Tags : Temples of Suzindram ,Namakkal ,Angenayar Jayanti Festival Goalagalam , Anjaneyar Jayanti festival at Suchindram and Namakkal temples; Devotees flocked
× RELATED நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!