ஒமிக்ரான் அச்சம் எதிரொலி; கொடிவேரி அணை மூடல்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கோபி: கோபி அருகே உள்ள கொடிவேரி அணை மூடப்பட்டதால் அணை வெறிச்சோடி காணப்பட்டதுடன் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது சுமார் 550 ஆண்டுகளுக்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி திருப்பூர், கோவை, நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும், குறைந்த செலவில் விடுமுறையை கழிக்க முடியும் என்பதாலும் ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கொடிவேரி அணை 2 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தொற்றுடன் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து ஜனவரி 1ம் தேதி சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்து உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, கொடிவேரி அணையிலும் நேற்று  (1ம் தேதி) மற்றும் இன்று  (2ம் தேதி) அணை மூடப்படும் என்றும் 2 நாட்களும் சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இதனால், நேற்று கொடிவேரி அணை சுற்றுலா பயணிகள் யாருமில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. 2 ஆண்டுகளாக கொடிவேரி அணை மூடப்பட்டு இருக்கும் நிலையில் 2 நாட்களுக்கு முன் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் புத்தாண்டு தினத்தன்று அணை மூடப்பட்டது சுற்றுலா பயணிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பவானிசாகர் அணை பூங்கா மூடல்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பொழுதுபோக்கு பூங்காவாக பவானிசாகர் அணை பூங்கா உள்ளது. பவானிசாகர் அணையை ஒட்டி 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள பூங்காவில், சிறுவர் படகு வசதி, சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், செயற்கை நீரூற்றுகள் உள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க டிசம்பர் 31 ஜனவரி 1 மற்றும் 2ம் தேதிகளில் அணை பூங்காவிற்குள் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என நீர்வள ஆதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அணை பூங்கா முன்பு குவிந்தனர். அணை பூங்கா நுழைவாயில் மூடப்பட்டதை கண்டு ஏமாற்றமடைந்த சுற்றுலாப்பயணிகள் பூங்கா அருகேயுள்ள பவானி ஆற்றுப் பாலத்தின் மீது நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.பவானிசாகர் போலீசார் தடுப்பு கம்பிகளை வைத்து பூங்கா சாலையில் செல்ல அனுமதி இல்லை என கூறி வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பினர். இதனால் பவானிசாகர் அணை மற்றும் பூங்கா, பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: