×

நெல்லையில் இருந்து செங்கோட்டை, திருச்செந்தூருக்கு மறுமார்க்க ரயில்கள் இயக்கப்படுமா?... பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை:  செங்கோட்டை மற்றும் திருச்செந்தூரில் இருந்து காலை நேரத்தில் நெல்லைக்கும், நெல்லையில் இருந்து மாலை நேரத்தில் திருச்செந்தூர், செங்கோட்டைக்கும் பாசஞ்சர் ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். கொரோனாவிற்கு முன்னர் மதுரை கோட்டத்தில் பாசஞ்சர் ரயில்கள் போதிய அளவு இயக்கப்பட்டு வந்தன. நெல்லை - திருச்செந்தூர், நெல்லை - செங்கோட்டை மார்க்கத்தில் மட்டுமே தினமும் 4 முறை பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டன.

இதன் காரணமாக மதுரை கோட்டத்தில் பாசஞ்சர் ரயில்கள் இயக்கத்தின் மூலம் வருவாய் ஈட்டுவதில் அம்பை. ரயில் நிலையம் 2வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு பாசஞ்சர் ரயில்கள் இயக்கத்தை முற்றிலுமாகி முடக்கி விட்டது. மதுரைக்கு அடுத்து தென் மாவட்டங்களில் மிகப்பெரிய நகரமான நெல்லைக்கு, தொழில் நிமித்தமாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தினசரி வந்து செல்கின்றனர். அதிலும் தென்காசி, அம்பை சுற்று வட்டாரங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் காலையில் செங்கோட்டையில் இருந்து புறப்படும் பயணிகள் ரயிலை பயன்படுத்தி நெல்லையில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதிக்காக வந்து சென்றனர்.

இதேபோல் திருச்செந்தூர், காயல்பட்டினம், நாசரேத் சுற்றுவட்டாரங்களில் இருந்து நெல்லைக்கு வருவோரும் அதிகம். ஆனால் சமீபகாலமாக நெல்லை - திருச்செந்தூர், நெல்லை - செங்கோட்டை ரயில்கள் ஒரு மார்க்கத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. காலை நேரத்தில் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும், செங்கோட்டைக்கும் செல்லும் ரயில்கள், மாலையில் அங்கிருந்து நெல்லைக்கு திரும்பி வருகின்றன. மறுமார்க்க ரயில்கள் இயக்கம் இன்று வரை இல்லை. எனவே நெல்லை - செங்கோட்டை, நெல்லை - திருச்செந்தூர் மார்க்கத்தில் முன்பு போல 4 ஜோடி ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது செங்கோட்டை, திருச்செந்தூர் பகுதிகளில் இருந்து நெல்ைல வருவதற்கு ரயில்கள் இல்லை. நெல்லையில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகளில் வெளியூர்களில் இருந்து பணியாற்றுவோர் அதிகம். நெல்லையை நோக்கி சாலை மார்க்கமாக செல்வதற்கு மிகவும் கடினமாக உள்ளது. பைக்கில் வருவோருக்கு சாலை வசதிகள் சரியாக இல்லை.

 மேலும் தினக்கூலி அடிப்படையில் ரூ.300 ஊதியம் பெறும் ஊழியர்கள், தினசரி பெட்ரோல் செலவுக்கு மட்டுமே ரூ.100 செலவிட வேண்டியுள்ளது. பஸ்சில் அதிக கூட்டம் காணப்படுவதோடு, கூடுதல் கட்டணத்தையும் செலுத்த வேண்டியுள்ளது. எனவே பாசஞ்சர் ரயில்களை மீண்டும் முன்பு போல இயக்குவதே தீர்வாக இருக்கும்.’’ என்றனர்.

Tags : Padhi ,Sengota ,Tiruchendur , Will there be rescheduled trains from Nellai to Red Fort and Thiruchendur? ... Passenger expectation
× RELATED ருச்செந்தூரில் விசிக ஆர்ப்பாட்டம்