தேனி புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் டூவீலர்கள்: போக்குவரத்து இடையூறால் பஸ் ஓட்டுனர்கள் அவதி

தேனி:  தேனி புதிய பஸ்நிலையத்தில், பஸ்கள் நிறுத்த பகுதியை ஆக்கிரமித்து டூவீலர்களை நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு, பஸ் ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர். தேனியில் புதிய பஸ்நிலையம் பைபாஸ் சாலையில் உள்ளது. இதன் வழியாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அரசு டவுன் பஸ்கள் சென்று வருகின்றன. இதுதவிர, தேனி வழியாக கம்பம், போடி, குமுளி, மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்களும், புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றன.

இதனால், தேனி புதிய பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போது அதிகமாக இருக்கும். இந்நிலையில், சமீபகாலமாக பஸ்நிலையத்தில் மதுரை, திருச்செந்தூர், நாகர்கோவில், போடி செல்லும் பஸ்கள் நிற்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இடங்களில், கடைகளை நடத்தக் கூடியவர்கள் மற்றும் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்களது டூவீலர்களை நிறுத்துகின்றனர். இதனால், பஸ்களுக்கான ரேக்குகளில் பஸ்களை நிறுத்த முடியாமல் ஓடுதளங்களில் பஸ்களை நிறுத்த வேண்டிய அவலம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, பின்னால் வரும் பஸ்கள் முன் நிறுத்தப்பட்ட பஸ்களை கடந்து செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.

பஸ் நிலையத்திற்குள் புறக்காவல் நிலைய போலீசார் இருந்தும் இத்தகைய அத்துமீறல்களை போலீசார் கண்டு கொள்வதில்லை. இதனால், பஸ் ஓட்டுனர்கள் மட்டுமல்லாமல் பாதசாரிகளும் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே, போலீசார் இத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஸ் ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: