நாடு முழுவதும் டெல்டா - ஒமிக்ரான் தாக்குதல் 3 மடங்கு வேகத்தில் பரவும் கொரோனா: தினசரி பாதிப்பு லட்சத்தை தொடும் அபாயம்

புதுடெல்லி: ஒமிக்ரான் பரவலைத் தொடர்ந்து, தினசரி கொரோனா தொற்று வேகம் கடுமையாக அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் தொற்றின் மொத்த எண்ணிக்கை 1,431 ஆக அதிகரித்துள்ள நிலையில், தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 22,775 ஆக உயர்ந்துள்ளது. மிகுந்த வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரசான ஒமிக்ரானின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, ஒமிக்ரானின் மொத்த எண்ணிக்கை 1,431 ஆக அதிகரித்துள்ளது. 23 மாநிலங்களில் பரவியுள்ள இந்த வைரஸ் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 454 பேரை தொற்றி உள்ளது. டெல்லியில் 351, கேரளாவில் 118, குஜராத்தில் 115ல் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 488 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மகாராஷ்டிராவில் இம்மாதம் 3வது வாரத்தில் ஒமிக்ரானால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அம்மாநில கூடுதல் தலைமை செயலாளர் (சுகாதாரம்) பிரதீப் வியாஸ் கூறி உள்ளார். 3வது வாரத்தில் 3வது அலை ஏற்பட்டு அதில் 80 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், 80 ஆயிரம் இறக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். அம்மாநிலத்தில் நேற்று முன்தினம் 10 அமைச்சர்களும், 23 எம்எல்ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஒமிக்ரானுடன் தினசரி கொரோனா தொற்றும் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 22,775 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த பாதிப்பு 3 கோடியே 48 லட்சத்து 61 ஆயிரத்து 579 ஆக உள்ளது. ஒரே நாளில் 220 பேர் இறந்துள்ளனர். மொத்த இறப்பு 4.81 லட்சமாகும். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 781 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையை விட குணமடைவோர் விகிதம் மீண்டும் கடுமையாக சரிந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை தினசரி தொற்று 6,242 ஆக இருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் 9,155, 13,180, மற்றும் 16,717 என வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது 3 மடங்கு வேகத்தில் கொரோனா அதிகரிக்கிறது. அதாவது அதன் பரவல் வேகம் சராசரியாக 25 சதவீதமாக உள்ளது. இதே வேகத்தில் கொரோனா பரவினால் அடுத்த 7 நாட்களில் மீண்டும் தினசரி தொற்று ஒரு லட்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, பிரான்சில்2.50 லட்சமாக உயர்வு

அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் மீண்டும் புதிய கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. அங்கு தினசரி பாதிப்புகள் 2.5 லட்சத்தை தாண்டி உள்ளன. அமெரிக்காவில் கடந்த டிச.30, 31ம் தேதிகளில் முறையே தினசரி பாதிப்பு 2.52 லட்சம், 2.65 லட்சமாக அதிகரித்துள்ளது. பிரான்சில் டிச.31ல் 2.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இங்கிலாந்தில் நேற்று ஒரேநாளில் 1.82 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நாடுகளில் திடீர் வைரஸ் அதிகரிப்புக்கு ஒமிக்ரான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருத்தர் கூட சாகவில்லை கிராம மக்கள் மொட்டை

மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் மாவட்டம் தேவ்ரி கவாசா கிராம மக்கள் நேற்று வித்தியாசமான நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த ஆண்டு கொரோனா மிகத் தீவிரமாக இருந்த நிலையில் நாடுமுழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். அந்த சமயத்தில் தேவ்ரி கிராமமக்கள் அங்குள்ள தேவ்நாராயணன் கோயிலில், கொரோனாவிடமிருந்து கிராமமக்களை காக்க வேண்டுமெனவும், முடிகாணிக்கை செலுத்துவதாகவும் வேண்டிக் கொண்டனர். அதன்படி, 25-30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மிகத் தீவிர நிலைக்கு சென்றாலும் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. எனவே புத்தாண்டு அன்று, கிராமத்தை சேர்ந்த 90 பேர் கோயிலில் மொட்டை அடித்து, ஊருக்கே விருந்து கொடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

15-18 வயது சிறுவர்களுக்கான தடுப்பூசி முன்பதிவு துவக்கம்

நாட்டில் ஒமிக்ரான் தொற்று வேகம் அதிகமாகி வருவதால், அதன் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்காக 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 60 வயதை கடந்த முதியோர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு 3வது டோசாக முன்னெச்சரிக்கை தடுப்பூசியும் ஜனவரி 3, ஜனவரி 10ம் தேதியில் இருந்து போடப்படும் என்று பிரதமர் மோடி கடந்த வாரம் அறிவித்தார். அதன்படி, 15-18 வயது சிறுவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக கோவின் செயலியில்  இவர்கள் முன்பதிவு செய்வதற்கான வசதி நேற்று தொடங்கியது. இது தொடர்பாக ஒன்றிய  சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தனது டிவிட்டரில், ‘புத்தாண்டு  சமயத்தில் 15-18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு  தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து தகுதியுள்ள சிறுவர்களுக்கும் முன்பதிவு செய்ய  வேண்டுமென குடும்பத்தினரை கேட்டுக் கொள்கிறேன்,’ என வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: