×

ஆஷஸ் தொடர் தோல்வி ரூட் தலய தூக்குங்க

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இப்போது ஆஸ்திரேலியாவில்  சுற்றுப்பயணம் செய்து ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மொத்தம் உள்ள 5 ஆட்டங்களில் இதுவரை 3 ஆட்டங்களிலும் தோற்று இங்கிலாந்து தொடரை இழந்துள்ளது. அதுமட்டுமல்ல ஏற்கனவே நடந்த இந்தியா, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை இழந்த நிலையில் ஆஷஸ் தொடர் தோல்வி, ஹாட்ரிக் தோல்வியாக  அமைந்துள்ளது. கூடவே ஆஷஸ் தொடர் தோல்வி எப்போதும் இங்கிலாந்துக்கு கவுரவ பிரச்னை. ஆஷஸ் தொடரில் இன்னும் 2 டெஸ்ட்கள் எஞ்சியுள்ள நிலையில்  கேப்டன் ஜோ ரூட்டை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அதிலும் முன்னாள் கேப்டன்  மைக்கேல் ஆதர்டன் வெளிப்படையாக, ‘ இங்கிலாந்து அணியின் சிறந்த  கேப்டனாக ஜோ ரூட் இருந்துள்ளார். விளையாட்டில் நம்ப முடியாத சாதனைகளை செய்துள்ளார். ஆனால் கடந்த சில தொடர்களில் அப்படி இல்லை. ஆஷஸ் தொடரை இழந்துள்ளோம். வீரர்கள் தேர்வு முதல், வியூகம் அமைப்பது வரை பல்வேறு வகைகளில் பிழைகள் நடந்துள்ளன. அதனால் ஏற்பட்ட தோல்விக்கு தனிப்பட்ட முறையில் கேப்டன்தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே  ரூட்டுக்கு பதில் வேறு கேப்டன் தேர்வு செய்ய இதுவே சரியான நேரம். அவருக்கு பதிலாக  ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்சை கேப்டனாக நியமிக்கலாம்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

கூடவே அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ‘ ஆஷஸ் தொடர் தோல்விக்கு  யார்க்க்ஷையர்காரர்தான் பொறுப்பேற்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். யார்க்‌ஷையர் நகரம் ரூட்டின் சொந்த ஊராகும். எனவே  இங்கிலாந்து  டெஸ்ட் அணியின் தலைமை பதவியில்  இருந்து  ஜோ ரூட்  தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜோ ரூட்... தனி ரூட்
டெஸ்ட் அணிக்கு மட்டும் கேப்டனாக இருக்கும் ஜோ ரூட், இந்த ஆஷஸ் தொடரிலும் இதுவரை அதிக ரன்  குவித்த வீரர்,  அதிக அரை சதம் அடித்த வீரர் என சாதனைகளை படைத்து உள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில்தான் ஆஸி வீரர்கள் உள்ளனர். அதுமட்டுமல்ல 2021ஆண்டில்  அதிக ரன் குவித்த(1708ரன்)  வீரராகவும் ரூட் இருக்கிறார். கூடவே  உலக அளவில் ஒரே ஆண்டில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தையும் பிடித்துள்ளார். இன்னும் 3 ரன் எடுத்திருந்தால் 2வது இடத்தையும், 89 ரன் எடுத்திருந்தால் முதல் இடத்தையும் பிடித்திருப்பார்.

Tags : Ashes series, defeat, root
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...