ஜம்மு காஷ்மீரில் போராட்டத்தை தடுக்க 3 மாஜி முதல்வர்களுக்கு வீட்டுக் காவலில் சிறை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அமைதிப் போராட்டத்தை தடுக்க, குப்கார் கூட்டணியை சேர்ந்த 3 முன்னாள் முதல்வர்கள் உள்பட பல அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை 2019ல் ரத்து செய்த ஒன்றிய அரசு, ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதையடுத்து, அங்கு தொகுதிகளை மறுவரையறை செய்ய முடிவு செய்த தேர்தல் ஆணையம் அதற்கான மறுவரையறை குழுவை நியமித்தது. இதன் கூட்டம் கடந்த மாதம் 20ம் தேதி டெல்லியில் நடந்தது. இதில், கூடுதலாக ஜம்முவுக்கு 6, காஷ்மீருக்கு ஒரு தொகுதி வழங்க பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குப்கார் கூட்டணி ஜனவரி 1ம் தேதி அமைதிப் போராட்டம் நடத்துவதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், குப்கார் கூட்டணியின் போராட்டத்தை தடுக்கும் வகையில், முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் நேற்று முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உமர் அப்துல்லா வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `காலை வணக்கம். 2022க்கு வரவேற்கிறேன். வழக்கம் போல், ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் சட்ட விரோதமாக தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளது. சாதாரண ஜனநாயக நடவடிக்கைகளால் மாநில நிர்வாகம் மிகுந்த அச்சத்துக்குள்ளாகி உள்ளது,’ என கூறியுள்ளார். மெகபூபா முப்தி வெளியிட்டுள்ள பதிவில், `எனது வீட்டின் முன்பும் போலீஸ் டிரக் நிறுத்தப்பட்டுள்ளது,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: