நாடு முழுவதும் 157 மருத்துவ கல்லூரிகளை கட்ட நிலம் கிடைக்காமல் தாமதம்

அவுரங்காபாத்: ``நாடு முழுவதும் 157 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்கான நிலங்களை கையகப்படுத்துதலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,’’ என்று ஒன்றிய அமைச்சர் பாரதி பவார் தெரிவித்தார். இது குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பவார் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மாவட்டங்களின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த 157 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதே போல், தற்போது உள்ள 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும் 22 ஆக உயர்த்தப்பட உள்ளது.

ஆனால், பெரும்பலான மாநிலங்களில் இத்திட்டத்திற்கான நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போதிய இடம் கிடைக்காமல் திட்டம் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக இந்த பணிகளை தடைபட்டுள்ளது. ஆனால், மகாராஷ்டிராவில் எய்ம்ஸ் அமைக்கும் பணி இந்த காரணத்தினால் தாமதமாகவில்லை. மகாராஷ்டிராவின் 2வது கட்ட கொரோனா அவசர நிவாரண திட்டத்துக்கு ஒன்றிய அரசு ரூ.23,000 கோடி நிதி வழங்கி உள்ளது. அதே போல், 3வது அலையை சமாளிப்பதற்கான நிவாரணத்துக்கும் போதிய நிதி வழங்கப்படும். இதன் மூலம், தேவையான அளவு மருத்துவ ஆக்சிஜன் தயாரித்து கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: