புத்தாண்டில் சபரிமலையில் அலை மோதிய பக்தர்கள்: தரிசனம், நெய்யபிஷேக நேரம் அதிகரிப்பு

திருவனந்தபுரம்: மகரவிளக்கு  பூஜைக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 30ம் தேதி மாலை திறக்கப்பட்டது.  மறுநாள் பூஜைகள் தொடங்கின. தினமும் 60  ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் பக்தர்கள் எண்ணிக்கை மிகவும்  அதிகரித்துள்ளது. இதனால், தரிசன நேரமும், நெய்யபிஷேக நேரமும்  அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ம் தேதி வரை அதிகாலை 4 மணி முதல் மதியம் 1  மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே நடை  திறக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் முதல் இரவு  1 மணி நேரம்  கூடுதலாக நடை திறக்கப்பட்டுள்ளது. இதன்படி இரவு 11 மணி வரை பக்தர்கள்  தரிசனம் செய்யலாம்.

சுவாமிக்கு அதிகாலை 5 மணி முதல் பகல்  10 மணி வரை பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்து வந்தனர். தற்போது ஒரு மணி நேரம்  அதிகரித்து 11 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறுகிறது. மேலும், பம்பை கணபதி  கோயிலில் இருமுடி கட்டுவதற்கு 24 மணி நேரமும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நேற்று புத்தாண்டு தினம் என்பதால் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள்  கூட்டம் காணப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில்  காத்திருந்து தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பலத்த  போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Related Stories: