×

திருவில்லிபுத்தூர் அருகே புத்தாண்டு தினத்தில் பரிதாபம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் கருகி பலி: 9 பேர் படுகாயம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உடல் கருகி  உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வழிவிடு முருகன் (40). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை களத்தூர் அருகே நாகலாபுரத்தில் உள்ளது. இங்கு 15 அறைகளில், 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். புத்தாண்டு தினமான நேற்று காலை பட்டாசு தயாரிப்பு பணியில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். ஒரு அறையில் தரை சக்கர வெடிக்கு தொழிலாளர்கள் மருந்து செலுத்திக் கொண்டிருந்தபோது உராய்வு ஏற்பட்டு, பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 8 அறைகள் இடிந்து விழுந்து தரைமட்டாகின.

இதில் அறையில் பணி செய்து கொண்டிருந்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த குமார் (38), சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த பெரியசாமி (55), பி.பாறைப்பட்டியை சேர்ந்த செல்வம் என்ற வீரக்குமார் (40) ஆகிய 3 பேர் அங்கேயே உடல் கருகி இறந்தனர். பி.பாறைபட்டியை சேர்ந்த முருகேசன் (35)  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், சாணார்பட்டி கோபாலகிருஷ்ணன் (35), அவருடைய மகன் மனோ அரவிந்த் (8) உட்பட 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மதுரை சரக டிஐஜி காமினி, விருதுநகர் எஸ்பி மனோகர், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி கணேசன் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து பட்டாசு ஆலை உரிமையாளரான வழிவிடு முருகனை தேடி வருகின்றனர்.

பறந்த டூவீலர்கள்
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அழகர்சாமி கூறுகையில், ‘‘தீபாவளி பண்டிகை முடிந்து கடந்த வாரம் பட்டாசு ஆலை திறக்கப்பட்டு உற்பத்தி நடந்து வருகிறது. நேற்று காலை 8.30 மணிக்கு பணிக்கு வந்தோம். அப்போது வெடி விபத்து ஏற்பட்டு கற்கள் சிதறி எங்கள் மீது விழுந்ததில் காயமடைந்தோம்’’ என்றார். மேலும், பட்டாசுகள் வெடித்து சிதறியபோது அதிர்வு ஏற்பட்டு டூவீலர்களும் தூக்கி வீசப்பட்டன.

Tags : New Year ,Srivilliputhur , Srivilliputhur, New Year, Fireworks Factory, Explosion
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!