×

ஆக்கிரமிப்பு அகற்ற அதிரடிப்படை அமைக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: அரசு நிலங்களை கண்டறியவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிரடிப்படை அமைக்கும்படி 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாமல் இருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள தனியார் கட்டிடம், திட்ட அனுமதியை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி, அதை சீல் வைக்கவும், அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை இடிக்கவும் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

 இதை எதிர்த்து அந்த கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துள்ள நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, மாநகராட்சியின் நோட்டீசை எதிர்த்து அரசுக்கு மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேல் முறையீட்டு விண்ணப்பம் அரசிடம் நிலுவையில் உள்ளதால் அந்த மேல்முறையீட்டு விண்ணப்பத்தை பரிசீலனைக்கு எடுத்து மனுதாரர் தரப்பு விளக்கமளிக்க அவகாசம் அளித்து 3 மாதங்களில் தகுந்த உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும், அரசு நிலங்களை ஆய்வு செய்து, எல்லைகளை வரையறுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் அதிரடிப்படை அமைக்கும்படி 2019ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி அதிரடிப்படை அமைக்கப்பட்டதா என தெரியவில்லை. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாமல் இருந்தது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

Tags : iCourt , Occupancy, Task Force, Officers, Strict Action, HIGH COURT
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு