×

காஷ்மீரில் புத்தாண்டு நள்ளிரவில் சோகம் வைஷ்ணவ தேவி கோயில் நெரிசலில் 12 பக்தர்கள் பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.காஷ்மீரின் கட்ரா பகுதியில் வைஷ்ணவ தேவி கோயில் உள்ளது. இங்குள்ள அம்மனை தரிசிக்க 13 கி.மீ. தொலைவில் உள்ள கத்ரா முகாமில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். நேற்று புத்தாண்டையொட்டி தரிசனத்துக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் தரிசனத்துக்காக பலர் முண்டியடித்தனர். அப்போது நெரிசல் ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தால் அடுத்தடுத்து பக்தர்கள் கீழே விழுந்தனர். அவர்களின் மீது மற்றவர்கள் ஏறி தப்பியோட முயன்றனர். இந்த விபத்தில் 12 பக்தர்கள் சம்பவ இடத்தில் பலியாகினர்.

20க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமுற்றவர்கள் மீட்கப்பட்டு கத்ராவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பல மணி நேரத்துக்கு பிறகு கோயிலில் மீண்டும் இயல்புநிலை திரும்பியது. பக்தர்களை போலீசார் வரிசையாக மீண்டும் தரிசனத்துக்கு அனுமதித்தனர். இதனிடையே, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்,’’ எனக் கூறப்பட்டுள்ளது. ஜம்மு கமிஷனர் ராகவ் கூறுகையில், ``பலியானோரில் 4 பேரது உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டுதல் உள்பட அனைத்து விதிமுறைகளும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. நிலைமை தற்போது சீரடைந்துள்ளது,’’ என்று தெரிவித்தார்.

பக்தர்கள் பலியான சம்பவத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி: வைஷ்ணவ தேவி கோயில் நெரிசலில் சிக்கி எதிர்பாராத விதமாக பக்தர்கள் பலியானதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திக்கிறேன்.பிரதமர்: வைஷ்ணவ தேவி சம்பவம் பற்றி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஆளுநர் சின்கா, அமைச்சர்கள் ஜிஜேந்திர சிங், நித்யானந்த ராயை தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தேன்.ராகுல்: வைஷ்ணவ தேவி சம்பவம் மிகவும் துயரமானது. பலியானோரின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள்.

நெரிசலுக்கு காரணம்?
ஜம்மு காஷ்மீர் டிஐஜி தில்பக் சிங் கூறுகையில், ``முதல் கட்ட விசாரணையில், இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த சில நொடிகளில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியாகினர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,’’ என்று தெரிவித்தார்.

Tags : Kashmir Vaishnava Devi ,President , Kashmir, New Year, Vaishnava Devi temple, devotees killed
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...