×

தாம்பரம், ஆவடியில் புதிதாக அமைக்கப்பட்ட காவல் ஆணையரகங்களை முதல்வர் திறந்து வைத்தார்: ஏடிஜிபிக்கள் ரவி, சந்தீப் ராய் ரத்தோர் கமிஷனர்களாக பதவி ஏற்றனர்

சென்னை: தாம்பரம் மற்றும் ஆவடியில் புதிய காவல் ஆணையரகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று  தொடங்கி வைத்தார். அதன்பின்னர் புதிய ஆணையரகங்களில் ஏடிஜிபிக்கள் ரவி, சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் ஆணையர்களாக பதவி ஏற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் 13.9.2021 அன்று சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து ஆற்றிய உரையில், ‘மாறி வரும் குற்றங்கள், மக்களின் பாதுகாப்புச் சூழல்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு, சென்னை பெருநகரக் காவல் துறையை மற்ற பெருநகரங்களில் உள்ளதுபோல் சீரமைத்திட இந்த அரசு எண்ணியுள்ளது. அந்த அடிப்படையில், தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி புதிய காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும்’ என்று அறிவித்தார்.

அதன்படி, சோழிங்கநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் காவல் ஆணையரகம்  மற்றும் ஆவடி சிறப்பு காவல்படை 2ம் அணி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆவடி காவல் ஆணையரகம் ஆகியவற்றை  முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,  பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து  சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச்  செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர்   எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர்  மற்றும் நிர்வாக இயக்குநர் அ.கா.விசுவநாதன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத், தாம்பரம் காவல் ஆணையர் மு.ரவி, ஆவடி காவல்  ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் காவல்துறை உயர்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வர் தொடங்கி வைத்த பிறகு, தாம்பரம் காவல் ஆணையராக ரவி, முறைப்படி  கையொப்பமிட்டு பதவியேற்றார். அதனை தொடர்ந்து, அவருக்கு செங்கல்பட்டு  கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட டி.ஐ.ஜி. சத்யபிரியா, வடக்கு  மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் மற்றும் உயர் காவல் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு  முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்துகளை தெரிவித்தனர். பதவியேற்புக்கு பிறகு தாம்பரம் ஆணையர் ரவி கூறியதாவது: பொதுமக்களை காவல் பணியாளர்கள் விரைவில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு  இந்த ஆணையரகம் தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் சிறப்பான காவல் பணியினை செய்து,  சட்டம்- ஒழுங்கை சீரமைப்போம். பெண்கள், குழந்தைகள், பெரியவர்களுக்கு  எதிராக குற்றங்கள் நடக்கின்றன.

அனைத்து குற்றங்களையும் தடுத்து பொதுமக்களிடம் நற்பெயரை பெறுவோம். காவலர் நமது சேவகர் என்ற நிலமையை உருவாக்கவே,  முதல்வர் இந்த ஆணையரகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த நோக்கத்தை  நிறைவேற்ற நாங்கள் கடினமாக உழைப்போம். 20 தாலுக்கா காவல்  நிலையங்கள்,அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து புலனாய்வு காவல்  நிலையம், போக்குவரத்து காவல் நிலையங்கள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட  சிறப்பு பிரிவுகளுடன் செயல்படுவோம். புறநகர் பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள்  உள்ளன. அதை முறையாக ஆராய்ந்து மக்களின் தேவை மற்றும் நலனை அறிந்து  நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

 தாம்பரம் காவல் ஆணையரகம், தாம்பரம் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய இரண்டு காவல் மாவட்டங்களுடன் 20 காவல் நிலையங்களை உள்ளடக்கி செயல்படும். நிர்வாக வசதிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் மற்றும் மணிமங்கலம் காவல் நிலையங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், தாழம்பூர் மற்றும் கேளம்பாக்கம் காவல் நிலையங்கள்  தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் இணைக்கப்பட்டுள்ளது. ஆவடி காவல் ஆணையரகம், ஆவடி மற்றும் செங்குன்றம் ஆகிய இரண்டு காவல் மாவட்டங்களுடன் 25 காவல் நிலையங்களை உள்ளடக்கி செயல்படும்.

நிர்வாக வசதிக்காக திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வெள்ளவேடு, செவ்வாப்பேட்டை, சோழவரம், மீஞ்சூர் மற்றும் காட்டூர் காவல் நிலையங்கள் ஆவடி காவல் ஆணையரக எல்லையில் இணைக்கப்பட்டுள்ளது. ஆவடி காவல் ஆணையரகம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை இரண்டாம் அணியில் உள்ள வளாகத்தில் எழில்மிகு தோற்றத்துடன் அமைக்கப்பட்டது. இந்த காவல் ஆணையரகம் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, ஆவடி காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, ஜோசப்சாமுவேல், துரை.சந்திரசேகரன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், க.கணபதி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Tambaram ,Avadi ,ADGPs ,Ravi ,Sandeep Roy Rathore , Tambaram, Avadi, Commissionerate of Police, Chief
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...