×

கொரோனா பரவலை தொடர்ந்து மீண்டும் கலைவாணர் அரங்கில் ஜன.5ல் பேரவை கூட்டம்: முதல்நாள் கவர்னர் உரையாற்றுகிறார்

சென்னை: கொரோனா பரவலை தொடர்ந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக மீண்டும் கலைவாணர் அரங்கத்தில் ஜன.5ல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. முதல் நாள்  கவர்னர் உரையாற்றுகிறார் என்று கவர்னர் அலுவலகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில், கவர்னர் உரையாற்றுவது மரபு. அந்த வகையில், 2022ம் ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டம் வருகிற ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டம் மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும் என்று கடந்த 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக, காகிதமில்லா என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக 100 சதவீதம் தொடு திரை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கூட்டத்தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மீண்டும் சில தளர்வுகள் குறைக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வழிகாட்டி நெறிமுறையை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள இருக்கைகளில் சமூக இடைவெளி விட்டு அமைப்பது சிரமம் என்பதால், இந்தாண்டும் சட்டப்பேரவை கூட்டத்தை கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 தமிழக அரசு கடந்த டிசம்பர் 13ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜனவரி 5ம் தேதி காலை 10 மணிக்கு நடத்த வேண்டும் என்று ஒப்புதல் அளித்துள்ளார். அதனடிப்படையில் ஏற்கனவே, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு பதிலாக ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், கூட்டம் நடைபெறும் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கணினிகள் சரியாக இயங்குகிறதா என்பது குறித்தும், மின் சாதன பொருட்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

கலைவாணர் அரங்கத்தின் 3வது தளத்தில் முதலமைச்சர் மற்றும் செயலாளர்களுக்கான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2வது தளத்தில் துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில் சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் அறைகள் அமைந்துள்ளன. தரைத்தளத்தில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 3வது தளத்தில் கூட்ட அரங்கு உள்ளது. இந்த அனைத்து அறைகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முதல் இப்பணிகளில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை 3ம் தேதிக்குள் முடிக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


* ஜனவரி 5ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது.
* மரபுப்படி கவர்னர் ஆர்.என்.ரவி பேரவையின் முதல் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
* முதலில் கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.
* கொரோனா காரணமாக பேரவை கூட்டம் மீண்டும் கலைவாணர் அரங்கில் நடக்கிறது.

Tags : Assembly ,Art Gallery ,Governor , Corona, Art Gallery, Assembly Meeting
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு