×

டெல்டா மாவட்டங்களில் 2ம் நாளாக விடிய விடிய கனமழை; திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சையில் 20,000 ஏக்கர் சம்பா பயிர்கள் சாய்ந்தன

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் 2ம் நாளாக நேற்றிரவும் விடிய விடிய கனமழை பெய்தது. இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழையால் திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில்  வயல்களில் தண்ணீர் தேங்கியதால் கதிர் விட்டுள்ள சுமார் 18,000 ஏக்கர் சம்பா பயிர்கள் சாய்ந்தன. 15 நாட்களில் அறுவடை செய்யவுள்ள பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக பெய்து வருகிறது. அனைத்து பகுதிகளிலும் பருவமழை இயல்பைவிட அதிகமாகவே பதிவாகி இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் முதல் மீண்டும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை பெய்துவருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. நேற்றும் சில கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கன மழை பெய்தது.  இன்றும் மழை பெய்து வருகிறது. நாகையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் மிதமான மழை பெய்தது.

இதேபோல் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.  இந்த திடீர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடைவீதிகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. திருவாரூரில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருவாரூர் தெற்குவீதியில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மழையால் வேலைக்கு செல்பவர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். சாலையோர கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டது.  கொரடாச்சேரி ஒன்றியத்தில் கொரடாச்சேரி, கமலாபுரம், அம்மையப்பன், வடகண்டம், திருவிடைவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.  மயிலாடுதுறையில் 2வது நாளாக நேற்றிரவும் விடிய விடிய மழை கொட்டியது. இன்று பல இடங்களில் மழை பெய்து வருகிறது.  சீர்காழியில் அதிகபட்சமாக 110 மில்லி மீட்டர் மழை பதிவானது. தஞ்சை, கும்பகோணம், திருவிடைமருதூர் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடை பருவத்தை நெருங்கிய சம்பா வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. பெரம்பலூரில் நேற்றுமாலை 4 முதல் 6 மணிவரை விட்டு விட்டு மழை பெய்தது. இன்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று முழுவதும் விட்டு விட்டு மழைபெய்தது. கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. திருச்சியில் 2வது நாளாக நேற்றிரவும் விட்டு விட்டு மழை பெய்தது.

இன்று காலை மழை பெய்து வருகிறது. மழை காரணமாக  வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வயல் பகுதிகளில் பெய்த மழையால் ஒரு சில இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த  சுமார் 5000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள், மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட கொள்ளிடம் மற்றும் சீர்காழி வட்டாரத்தில் 10ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டது. இதேபோல் தஞ்சை சுற்றுவட்டார சுமார் 5000 ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கின.  15 நாட்களில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சம்பா, தாளடி இளம் பயிர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்கள் மழை பெய்யும் என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். தஞ்சாவூர் உள்ளிட்ட மேற்படி 9 மாவட்டங்களில் நிர்வாக ரீதியாக மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தென்தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Tags : Delta ,Samba ,Tiruvarur ,Mayiladura ,Tamjah , 2nd day of heavy rain in delta districts; 20,000 acres of samba crops were uprooted in Thiruvarur, Mayiladuthurai and Thanjavur
× RELATED தஞ்சாவூர் அருகே கோடைநெல் சாகுபடி தீவிரம்