×

புத்தாண்டு தரிசனத்திற்காக ஒரே நேரத்தில் குவிந்த பக்தர்கள்; வைஷ்ணவ தேவி கோயில் பவனில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் பலி.!

காஷ்மீர்: புத்தாண்டு தரிசனத்திற்காக காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோயில் பவனுக்குள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நுழைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 13 பக்தர்கள் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் திரிகுடா மலை உச்சியின் மீது புகழ்பெற்ற மாதா வைஷ்ணவ தேவி கோயில் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். நேற்று நள்ளிரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள பவனில் ஒரே நேரத்தில் கூடியதால், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இன்று அதிகாலை 2.45 மணியளவில் 13 பக்தர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்த போலீசார், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் ஏடிஜிபி முகேஷ் சிங் கூறுகையில், ‘மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கு புத்தாண்டு தினம் என்பதால் நேற்றிரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். நள்ளிரவு நேரத்தில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், கூட்டத்தில் சிக்கி 13 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. காயமடைந்த 20க்கும் மேற்பட்டோரை மீட்டு மாதா வைஷ்ணவ தேவி நாராயணா சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன; இப்போதைக்கு புனித யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றனர். மாதா வைஷ்ணவ தேவி பவனில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் டுவிட்டில், ‘நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். ஜம்மு -காஷ்மீர் ஆளுநர், ஒன்றிய மூத்த அமைச்சர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், ‘இன்று புத்தாண்டு தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் வைஷ்ணவ தேவி கோயிலுக்கு வந்தனர். வளாகத்தில் உள்ள பவனில் அவர்கள் கூட்டமாக நுழைந்தபோது நெரிசல் ஏற்பட்டது. பவனுக்குள் அனுமதி சீட்டுகள் பெறாமல் ஆயிரக்கணக்கானோர் நுழைந்தனர். மீட்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கி உள்ளோம். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரண உதவி வழங்க ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது’ என்றனர்.

Tags : New Year's Vitation ,Vaishnava Devi Temple Bawan , Devotees gathered at the same time for the New Year darshan; 13 killed in Vaishnava Devi temple pavilion
× RELATED நிலையான, சிறந்த அரசுக்கு மக்கள்...