×

பெருமழை ,புயலை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!!

சென்னை : தமிழ்நாடு அடிக்கடி வெள்ளம், பெரும் மழை போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, தக்க நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டு ,சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்திட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் அமித்ஷா எழுதியுள்ள கடிதத்தில்,

பெருமழை கால சூழ்நிலையில் மாநில அரசு அதனை எதிர்கொள்வது குறித்த ஒரு முக்கியமான விஷயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.  பெருமழை கடும் புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள, மாநில அரசு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை சார்ந்து இருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.  உரிய காலத்தில் இந்த மையத்தில் இருந்து பெறப்படும் முன்னெச்சரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தை தயார் நிலையில் வைத்திருக்கவும்,  அதன் மூலம் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் ஏதுவாக அமைகிறது.  ஆனால் பெருமழை குறித்த அறிவிப்புகள் உரிய நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால், வழங்க இயலாத நிலை உள்ளதை காண்கிறோம்.  

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஒரு சில நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கடந்த 30 ஆம் தேதி வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது . ஆனால் மிகக் கடுமையான மழை பெய்தது. மிக அதிக கனமழை  காரணமாக சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து பல பகுதிகள் பாதிப்படைந்தன. சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மழை குறித்து, உரிய நேரத்தில் சரியாக கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்கப் போதுமான திறன் குறைவாக உள்ளதால், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் தக்க நேரத்தில் உரிய முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை அடிக்கடி ஏற்பட்டு விடுகிறது.  இது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு ,உரிய உடமை இழப்புக்கள் ஏற்படுவதற்கும், முக்கியமான கட்டமைப்புகள் சேதம் அடைவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

இந்த நிகழ்வுகள் சென்னை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை அறிக்கை தயாரிக்கும் அமைப்பினை மேம்படுத்துவதன், முக்கியத்துவத்தையும் ,அதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டியதின் அவசியத்தையும் காட்டுகிறது.  எனவே பெருமழை புயல் போன்ற சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில்,  சென்னை வானிலை ஆய்வு மையம் மேம்படுத்தப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Stalin ,Amitshah ,Chennai Meteorological Study Centre , அமித்ஷா,முதல்வர் ஸ்டாலின், கடிதம்
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினின் வியூகம் மோடி,...