×

செஞ்சுரியன் டெஸ்டில் பெற்ற வெற்றி இந்திய அணியின் வலிமைக்கு சாட்சி...கேப்டன் கோஹ்லி பெருமிதம்

செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்க அணியுடன் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணியின் வலிமைக்கு சாட்சியாக அமைந்துள்ளது என்று கேப்டன் கோஹ்லி கூறியுள்ளார். இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளிடையே செஞ்சுரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில், இந்தியா 113 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முத்திரை பதித்தது. இந்த மைதானத்தில் விளையாடிய 3 போட்டிகளில் இந்தியா பெற்ற முதல் வெற்றி இது என்பதுடன், தென் ஆப்ரிக்க மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் இந்தியா பெற்ற 4வது வெற்றியாகும். மேலும், தென் ஆப்ரிக்காவில் 2 டெஸ்ட் வெற்றிகளை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையும் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது.

இந்த அசத்தல் வெற்றி குறித்து கோஹ்லி நேற்று கூறியதாவது: தென் ஆப்ரிக்காவில் நடக்கும் டெஸ்ட் தொடரில் எந்த மைதானத்தில் விளையாடுவதும் அத்தனை எளிதாக இருக்காது. அதிலும், செஞ்சுரியனில் விளையாடுவது மிகப் பெரிய சவால். நான்கு நாட்களில் வெற்றியை வசப்படுத்தி இருப்பது, இந்திய அணியின் வலிமைக்கு சாட்சியாக அமைந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ஒரு முழுமையான அணி என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளோம். எந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை மிகக் கவனமாக எதிர்நோக்குவோம். கிரிக்கெட்டில் இது தான் எங்களது அணுகுமுறையாக உள்ளது. அத்தகைய வாய்ப்புகள் உருவாகும்போது  அவற்றை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம். 1-0 என முன்னிலை பெற்றிருப்பது சாதகமான அம்சம்.

தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும் தங்கமான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. 2வது டெஸ்டிலும் கடும் நெருக்கடி கொடுத்து அதை சாதிக்க முடியும் என நினைக்கிறேன். வாண்டரர்ஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை மிகுந்த தன்னம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம். நாங்கள் இது வரை எப்படி விளையாடி இருக்கிறோம் என்பதை ஆய்வு செய்ய புத்தாண்டு ஒரு சரியான நேரமாக இருக்கும். கடந்த 2-3 ஆண்டுகளாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம் என்றே கருதுகிறேன். குறிப்பாக, வெளிநாட்டு மைதானங்களில் எங்களின் செயல்பாடு அபாரமாக இருந்துள்ளது. இவ்வாறு கோஹ்லி கூறியுள்ளார்.  இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் 2வது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்கில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

Tags : Centurion Test ,Indian ,Kohli , Centurion Test, victory, Indian team, Captain Kohli
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்