யு19 ஆசிய கோப்பை 8வது முறையாக இந்தியா சாம்பியன்

துபாய்: யு19 ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில், இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்று வந்த இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா யு19 - இலங்கை யு19 அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இலங்கை பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். இலங்கை யு19 அணி 38 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்தது. சதிஷா ராஜபக்ச, மதீஷா பதிரணா தலா 14 ரன், ரவீன் டி சில்வா 15 ரன் எடுக்க, யாசிரு ரோட்ரிகோ அதிகபட்சமாக 19 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய பந்துவீச்சில் விக்கி ஆஸ்ட்வால் 3, கவுஷல் தாம்பே 2, ராஜ் பாவா, ரவி குமார், ராஜ்வர்தன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மழை காரணமாக ஆட்டத்தில் இடையூறு ஏற்பட்டதால், டி/எல் விதிப்படி இந்தியா யு19 அணி 32 ஓவரில் 102 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங் இணைந்து துரத்தலை தொடங்கினர். ஹர்னூர் 5 ரன் எடுத்து ரோட்ரிகோ பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து ரகுவன்ஷியுடன் ஷேக் ரஷீத் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்க்க, இந்தியா யு19 அணி 21.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. ரகுவன்ஷி 56 ரன் (67 பந்து, 7 பவுண்டரி), ரஷீத் 31 ரன்னுடன் (49 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 8வது முறையாக இளைஞர் ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதுவரை 9 ஆசிய கோப்பை யு19 தொடர்கள் நடந்துள்ளதில், 2017ல் மட்டும் ஆப்கானிஸ்தான் கோப்பையை வென்றுள்ளது. மற்ற 8 தொடர்களிலும் இந்திய அணியே சாம்பியனாகி ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இந்த வெற்றியால், வெஸ்ட் இண்டீசில் வரும் ஜனவரி 14ம் தேதி தொடங்கும் ஐசிசி யு19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரிலும் இந்திய அணி பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: