×

மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் 2 பேர் உயிரிழப்பு இந்தியாவில் பலி கணக்கை தொடங்கியது ஒமிக்ரான்: ஒரே நாளில் 309 பேர் பாதிப்பு

புதுடெல்லி: ஒமிக்ரான் தொற்றால் மகாராஷ்டிராவிலும், ராஜஸ்தானிலும் தலா ஒருவர் பலியாகி இருக்கின்றனர். இதன்மூலம், இந்தியாவில் இந்த வைரசால் பலி கணக்கு தொடங்கியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் பரவத் தொடங்கிய ஒமிக்ரான் தொற்று குறைந்த நாட்களிலேயே 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் ஒமிக்ரான் பரவல்  வேகமெடுத்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதுவரை 23 மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 309  பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளது.

இதில், சிகிச்சை பெற்று குணமடைந்த 374 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நைஜீரியாவில் இருந்த வந்த 52 வயது நபர், ஒமிக்ரான் தொற்றால் கடந்த செவ்வாயன்று உயிரிழந்தார். அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கையில் அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் ஒமிக்ரான் பாதிப்பால் 2வது உயிரிழப்பு பதிவாகி உள்ளது. 73 வயது முதியவருக்கு கடந்த 21ம் தேதி கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என வந்தது. ஆனால், 25ம் தேதி அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், அவர் நேற்று உயிரிழந்தார். நாட்டில் புதிதாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால், தற்போதுதான் உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளன. ஒமிக்ரான் தொற்றால் அதிகப்படியாக மகாராஷ்டிராவில் 450 பேர், டெல்லியில் 320  பேர், கேரளாவில் 109 மற்றும் குஜராத்தில் 97  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் வேகம் எடுக்கும் பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 64 நாட்களுக்கு பின் மீண்டும் 16 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் கொரோனாவால் 12 ஆயிரத்து 764 பேர் புதிதாக பாதித்துள்ளனர். இதன்மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 48 லட்சத்து 38 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது. மேலும், புதிதாக 220 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 81 ஆயிரத்து 80 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அதிகப்பட்சமாக கேரளாவில் 164 பேர் இறந்துள்ளனர்.

தடுப்பூசி இலக்கை எட்ட தவறியது ஒன்றிய அரசு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்தாண்டு இறுதிக்குள் நாட்டில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்தது. இன்றுடன் (நேற்று) இந்தாண்டு முடிகிறது. ஆனால், தற்போது வரை தனது தடுப்பூசி இலக்கை ஒன்றிய அரசு எட்டவில்லை. இன்று பிற்பகல் வரை 144.67 கோடி  தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 84.51 கோடி பேர் முதல் டோசும், 60.15 கோடி பேர் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்,’ என கூறியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் அருங்காட்சியகம் மூடல்
ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனாதிபதி பவன் சுற்றுலா தளம், ஜனாதிபதி பவன் அருங்காட்சியகம் ஆகியவை அடுத்த அறிவிப்பு வரும் வரை, சனிக்கிழமை (இன்று) முதல் மீண்டும் மூடப்படுகிறது. ஜனாதிபதி மாளிகை வீரர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெறாது,’ என்று கூறப்பட்டுள்ளது.

கோவிஷீல்டை முழுமையாக சந்தைப்படுத்த விண்ணப்பம்
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்தியாவில் கோவிஷீல்டு விநியோகம் 125 கோடியை கடந்துள்ளது. இப்போது முழு சந்தை அங்கீகாரத்துக்கான போதுமான அனைத்து தரவுகளும் இந்திய அரசிடம் உள்ளது. எனவே, கோவிஷீல்டு தடுப்பூசியை முழுமையாக சந்தைப்படுத்துவதற்கான அங்கீகாரத்துக்கு அனுமதி கேட்டு ஒன்றிய அரசிடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது,’ என்று கூறியுள்ளார்.

டெல்டாவை ஒடுக்கி ஒமிக்ரான் ஆதிக்கம்
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் இந்தாண்டு டெல்டா வைரசால் 2வது அலை ஏற்பட்டது. இதில் பல லட்சம் மக்கள் பலியாகினர். கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மீண்டனர். இந்நிலையில், இந்தியாவில் டெல்டா வைரசுக்கு பதிலாக ஒமிக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அடுத்த சில வாரங்களில் டெல்டாவை அடக்கி விட்டு ஒமிக்ரான் ஆதிக்கம் செலுத்தும் என்று நிபுணர்கள் நேற்று தெரிவித்தனர்.

Tags : Maharashtra, Rajasthan ,Omigron ,India , Maharashtra, Rajasthan, fatality, India, Omigron
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...