×

திரிகோணமலை துறைமுகத்தில் இந்தியாவுக்கு 99 சேமிப்பு கிடங்குகளில் 14 மட்டுமே கிடைத்தது: இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்

கொழும்பு: திரிகோணமலை துறைமுகத்தில் உள்ள 99 எண்ணெய் கிடங்குகளில் 14ஐ மட்டுமே இந்தியாவுக்கு இலங்கை மீண்டும் குத்தகைக்கு கொடுத்துள்ளது. இலங்கையின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள திரிகோணமலை துறைமுகம், வரலாற்று சிறப்புமிக்க பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. இங்கு 2ம் உலகப் போரின் போது பிரிட்டன் பயன்படுத்திய 99 எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை ஸ்ரீலங்கா எண்ணெய் நிறுவனம், கடந்த 2002ம் ஆண்டு முதல் 35 ஆண்டுகளுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு குத்தகைக்கு அளித்தது. இதற்காக, ஆண்டுக்கு ரூ.75 லட்சம் கட்டணம் வாங்கியது.

இந்நிலையில், ஒப்பந்த காலம் முடியும் முன்பாகவே இவற்றை இந்தியாவிடம் இருந்து திரும்ப பெற இலங்கை அரசு முடிவு செய்து, அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் இலங்கை வெளியிட்டது. இந்நிலையில், இருநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் உதய கமன்பில கூறுகையில், ‘‘99 எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் 61 கிடங்குகள் சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்திய எண்ணெய் நிறுவனமும் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள திரிங்கோ பெட்ரோலியம் முனையும் லிமிடெட் என்ற நிறுவனத்தால் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படும். இதில் 51 சதவீத பங்குகள் சிலோன் பெட்ரோலியம் கார்பரேஷன் வசம் இருக்கும். 14 எண்ணெய் கிடங்குகள் மட்டுமே இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு 50 ஆண்டு கால குத்தகைக்கு விடப்படும். இதற்கான ஒப்பந்தங்கள் அடுத்த வாரம் கையெழுத்தாகும்,’’ என்றார்.

Tags : India ,Trincomalee ,Sri Lanka , Trincomalee, Port, India Warehouse, New Agreement with Sri Lanka
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...