×

கட்டப் பஞ்சாயத்து, மணல் கொள்ளை அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்பி.யிடம் நடிகை ரோஜா புகார்

சித்தூர்: கட்டப்பஞ்சாயத்து, மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சித்தூர் எஸ்.பி.யிடம் நடிகையும், எம்எல்ஏ.வுமான ரோஜா புகார் அளித்தார். சித்தூரில் நேற்று, எஸ்பி குடியிருப்பு அலுவலக வளாகத்தில் எஸ்.பி. செந்தில்குமாரிடம் நகரி எம்எல்ஏ ரோஜா மனு வழங்கினார். இதன்பின், எம்எல்ஏ ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன். ஆந்திர மாநிலத்தில் வீடு இல்லாத ஏழை எளிய மக்கள் யாரும் இருக்கக்கூடாது என நினைத்து மாநிலம் முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடு கட்டி வருகிறார். நகரி சட்டமன்றத் தொகுதியில் ஒரே இடத்தில் ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வீடுகள் கட்டி வரப்படுகிறது.

ஆனால், ஆளும் கட்சியை சேர்ந்த சில சட்ட விரோதிகள் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து நகரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ரோஜா மணல் கொள்ளையில் பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார் என வதந்திகள் பரப்பி வருகிறார்கள். எதிர்கட்சியினர் வேண்டுமென்றே எங்கள் கட்சியைச் சேர்ந்த சில சட்ட விரோதிகளுடன் கூட்டு சேர்ந்து எனக்கு அவப்பெயர் ஏற்படுத்த பல்வேறு தீய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே கட்சி மேலிடத்தில் எனக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தேன். உடனடியாக கட்சி மேலிடம் எனக்கு எதிராக செயல்பட்டவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள்.

இருப்பினும் அவர்கள் ஆளும் கட்சியின் அமைச்சர்கள், முதலமைச்சர், எம்எல்ஏக்கள் போட்டோக்களை பேனரில் அமைத்து அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், மாநில டிஜிபி கவுதம் சவான் பேனர் அமைத்து பல்வேறு தீய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மாநில டிஜிபிக்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவித்தேன்.  அவர் சித்தூர் மாவட்ட கலெக்டர் செந்தில்குமாரிடம் புகார் வழங்குங்கள். எனது புகைப்படத்தை வைத்துக்கொண்டு தீய செயல்களில் யார் ஈடுபட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி, எஸ்.பி.செந்தில்குமாரிடம் புகார் மனு வழங்கினேன். அவர், மிக விரைவில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார். இவ்வாறு ரோஜா தெரிவித்தார்.

Tags : Kattab Panchayat ,Roja ,SP , Kattab Panchayat, Sand Robbery, Action, SP, Actress Roja
× RELATED குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்