நீதிமன்றத்தின் பிடிவாரன்ட் உத்தரவை அமல்படுத்தாத 2 பெண் இன்ஸ்பெக்டர்களின் சம்பளத்தை வசூலிக்க வேண்டும்: போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நெற்குன்றத்தைச் சேர்ந்த பரிமளா தனது கணவர் தீஜே தயாள், மாமியார் கீதா, மைத்துனி சபீதா, மைத்துனியின் கணவர் ஸ்ரீநாத் ஆகியோருக்கு எதிராக குடும்ப வன்முறை தொடர்பாக புகார் அளித்தார். கடந்த 2013ம் ஆண்டு அளிக்கப்பட்ட இந்த புகாரின்படி, நான்கு பேருக்கு எதிராக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு 2016ம் ஆண்டு எழும்பூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், சபீதா மற்றும் ஸ்ரீநாத் மீதான வழக்கை தனியாக பிரித்த சிறப்பு நீதிமன்றம், அவர்களை கைது செய்து ஆஜர்படுத்தும் வகையில் இருவருக்கும் எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து 2020ம் ஆண்டு அக்டோபரில் உத்தரவு பிறப்பித்தது.

இந்த பிடி வாரண்ட் உத்தரவை இதுவரை போலீசார் அமல்படுத்தவில்லை எனக் கூறியும் அந்த உத்தரவை அமல்படுத்துமாறு உத்தரவிடக் கோரியும் பரிமளா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிடிவார்ண்ட் பிறப்பிக்கப்பட்ட 2020ம் ஆண்டு அண்ணாநகர் ஆய்வாளர்கள் தனலட்சுமி மற்றும் செல்வி ஆகிய இருவரும் பிடி வாரண்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.தங்கள் கடமையைச் செய்யாததால் அவர்களுக்கு வழங்கிய சம்பளத்தை திரும்ப வசூலிக்க சென்னை போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: