காட்பாடி பிடிஓ வங்கி கணக்கில் இருந்து ஆன்லைனில் ரூ.70 லட்சம் திருடிய சேலம் பிடிஓ ஊழியர் கைது

வேலூர்:  வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வங்கிக் கணக்கில் கடந்த நவம்பர் மாதம் ரூ.3 கோடிக்கு நிதி கையிருப்பில் இருந்துள்ளது. அதில் ரூ.70 லட்சம் தொகை திடீரென மாயமானதை நவம்பர் 15ம் தேதி பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பாக வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவில், காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரகு புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், திருப்பத்தூரைச் சேர்ந்த பூவரசன் என்பவரது வங்கி கணக்குக்கு ரூ.50 லட்சமும், காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் வங்கியின் கணக்குக்கு ரூ.20 லட்சம் மாற்றப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன்(23), திருப்பத்தூர் பிரபு, வாணியம்பாடி ஜீவா (22) ஆகிய 3 பேரை வேலூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் மேச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்த மோகன் (24) என்பவரை வேலூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: அரசு கருவூலம் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வழங்கப்படும் நிதியை ஆன்லைன் மூலம் திருட முடிவு செய்தனர். இதற்காக ஆன்லைனில் மோசடி செய்து வரும் நபரை நாடியுள்ளனர். அந்த மோசடி நபர் மூலம் காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வங்கி பணப் பரிமாற்ற ரகசிய எண் மற்றும் காட்பாடி சார்நிலைக் கருவூல அலுவலகத்தில் உள்ள பண பரிமாற்ற ரகசிய எண் ஆகியவற்றை திருடியுள்ளனர்.

பின்னர், அவர்கள் நவம்பர் 12ம் தேதி மாலை ரகசிய எண்களை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.70 லட்சம் பணத்தை இரண்டு வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய மூளையாக மேச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றிய தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மோகன் தான் செயல்பட்டுள்ளார். வங்கி கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்தால் 30 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என்று இவர் கூறியுள்ளார். அவர்களும் தருவதாக கூறியுள்ளனர். அதன்பேரில் பண பரிமாற்றம் செய்துள்ளார். இந்த சம்பவம் நடந்த பிறகு இதுகுறித்து கருவூலக தலைமை அலுவலகத்திற்கு ஐடி மற்றும் பாஸ்வேர்டை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன்பேரில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள கருவூல ஐடி மற்றும் பாஸ்வேர்ட் மாற்றம் செய்து அந்த இணையதளத்தை வலுப்படுத்தி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Related Stories: