புத்தாண்டு நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு புதுச்சேரியில் இருந்து நடிகை சன்னி லியோன் ஓட்டம்: ரசிகர்கள் ஏமாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு நடிகை சன்னி லியோன் திடீரென புறப்பட்டு சென்று விட்டார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் புதுச்சேரி சுற்றுலா பயணிகளால் களைகட்டியுள்ளது. புத்தாண்டையொட்டி புதுவை பழைய துறைமுக வளாகத்தில் நேற்று முன்தினம் முதல் இன்று (1ம் தேதி) வரை 3 நாட்களுக்கு இசைநிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதற்காக ஆயிரக்கணக்கான டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளது.

இதனிடையே கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பங்கேற்கும் இந்த இசை நிகழ்ச்சியை கண்டித்து தமிழர் களம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். அப்போது பழைய துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சன்னி லியோனின் பேனரை கிழித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100க்கும் குறைவான ரசிகர்களே பங்கேற்றனர். ஆனால், பாதுகாவலர்கள் இருமடங்கு இருந்தனர். நிகழ்ச்சியின் இடையே சன்னி லியோன் வருவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர், இசை நிகழ்ச்சிக்கு அவர் வந்தார். இரவு 9 மணி முதல் 11 மணி வரை இருக்கையில் அமர்ந்திருந்தார்.

ஆனால் ரசிகர்களுடன் பேசி நடனமாடி உற்சாகப்படுத்தவில்லை. அதன்பிறகு அவர், புதுச்சேரியில் இருந்து சென்று விட்டார். இன்னும் 2 நாட்களுக்கு இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் 31ம் தேதி இரவு திரை பிரபலங்கள் பங்கேற்கக் கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் தான் சன்னி லியோன் இசை நிகழ்ச்சியை ரத்து செய்ததாக தெரிகிறது.

Related Stories: