×

மக்கள் தொகை அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகம் முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

சென்னை: மக்கள் தொகை அடிப்படையிலும், நிர்வாக வசதிக்காகவும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆவடி மற்றும் தாம்பரம் புதிய காவல் ஆணையரகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். நிர்வாக வசதிக்காக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம், ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் என 3 ஆக பிரித்து அரசாணையும் வெளிடப்பட்டது. அதன்படி தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரியாக கூடுதல் டிஜிபி ரவி, ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்ட 3 மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் காவல் நிலையங்கள் எவை என்று கடந்த ஒரு வாரமாக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி எல்லைகள் பிரிக்கப்பட்டது.

அந்த வகையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகங்களுக்கு உளவு பிரிவு, நிர்வாக பிரிவு, சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து என அனைத்து பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் துறை ஆணையர் கட்டுப்பாட்டில், அதாவது சென்னை மாவட்டத்தில் பூக்கடை காவல் நிலையம் முதல் ராயலா நகர் காவல் நிலையங்கள் வரை மொத்தம் 104 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளடக்கியுள்ளது. ஆவடி மாநகர காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் சென்னை மாவட்டத்தில் 20 காவல் நிலையங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 5 காவல் நிலையங்கள் என மொத்தம் என 25 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் சென்னை மாவட்டத்தில் 13 காவல் நிலையங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 காவல் நிலையங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 காவல் நிலையங்கள் என மொத்தம் 20 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது. அதேபோல் சோழிங்கநல்லூரில் உள்ள பெரும்பாக்கம் சாலையில் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த 1 புதிய காவல் ஆணையரகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.  அப்போது தாம்பரம் கமிஷனராக கூடுதல் டிஜிபி ரவி சிறப்பு அதிகாரியாக பதவியேற்கிறார். அதேபோல் ஆவடி கமிஷனராக கூடுதல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறப்பு அதிகாரியாக பதவியேற்கிறார். அதைதொடர்ந்து இன்று முதல் அதாவது புத்தாண்டான 2022 முதல் தாம்பரம் மற்றும் ஆவடி என தனித்தனியாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்படும்.

Tags : Chief Minister of ,Tambaram Police Commission , Population, basically, Avadi, Tambaram Police Commission
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...