×

சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் 34 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் அரசு மாதிரி பள்ளி  உள்ளது. இங்கு நீட் உள்ளிட்ட சிறப்பு படிப்புகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.  இந்நிலையில், சிறப்பு பயிற்சி வகுப்பில் படித்து வந்த சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த மாணவன் ஒருவர், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு, பயிற்சி மையத்துக்கு வந்து விடுதியில் தங்கி படித்துள்ளார். கடந்த 28ம் தேதி அந்த மாணவனுக்கு சளி, காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்தில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து  பயிற்சி மைய விடுதியில் தங்கி படிக்கும் 71 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவர்களின் பரிசோதனை முடிவு நேற்று வந்தது. இதில், 24 மாணவர்களும், 10 மாணவிகளும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்களை சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘இந்த பள்ளியில் 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இவர்களின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : Corona ,Saidapet Government Model School , Saidapet, Government Model, School, Corona for 34 persons
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...