சென்னையில் போக்குவரத்து நெரிசலால் திணறிய சாலைகளில் போக்குவரத்து காவலர்கள் இல்லை: பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:  சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலுக்கு மழை வெள்ளம் காரணம் மட்டுமே காரணம் அல்ல. வாகனப் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படாதது தான் மிக முக்கிய காரணம். அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, 100 அடி சாலை உள்ளிட்டவற்றில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்ட நிலையில், அவற்றை ஒட்டிய உட்புற சாலைகள் காலியாகவே இருந்தன. அவற்றில் எந்தெந்த சாலைகள் பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏற்றவை என்பதை அந்தந்த பகுதிகளில் உள்ள போக்குவரத்துக் காவலர்கள் அடையாளம் கண்டு, அந்த சாலைகளில் சிறிய வகை வாகனங்களை திருப்பி விட்டிருந்தால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

 ஆனால், அதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. போக்குவரத்து நெரிசலால் திணறிய பல சாலைகளில் போக்குவரத்துக் காவலர்களையே காண முடியவில்லை. கடந்த காலங்களில் சென்னையில் தொடர்மழை பெய்யும் போது ஒரு முறை வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் சென்னையில் நான்கு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது விரும்பத்தக்கது அல்ல. இனி இப்படி ஒரு நிலை ஏற்படாத வகையில், சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளைத் தடுப்பதற்கான நிரந்தரத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை விரைந்து வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: