நாகை மாவட்டத்தில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இயல்பாய் விட கூடுதலாக மழை பெய்திருக்கிறது.கன்னியாகுமரி, விழுப்புரம், திருப்பத்தூர் மாவட்டங்களில் இயல்பைப்போல இருமடங்குக்கு மேல் மழை கொட்டியுள்ளது. கோவை மாவட்டத்தில் இயல்பு அளவான 343.8 மி. மீ-யை  விட 97% அதிகமாக 678.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களான திருத்துறைப்பூண்டி, நன்னிலம், குடவாசலில் மழை பெய்து வருகிறது.

மன்னர்குடி, கோட்டூர், வடபாதிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.  மேலும், தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்றும்,நாளையும் பலத்த மழையோ அல்லது மிக பலத்த மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் கடற்கரையை ஒட்டி 5.8 கி. மீ. உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மிக பலத்த மழை பெய்யும்.

தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள்  ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகை மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் 24 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆவடி 23 செ.மீ., எம்.ஆர்.சி. நகர் 21, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி, எம்ஜிஆர் நகர், அம்பத்தூர் தலா 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்று முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு 5 நாட்கள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த மழை சற்று ஓய்ந்த நிலையில் இன்று காலை முதல் மழை தொடர்கிறது.

Related Stories: