கும்பகோணம் ரயில் நிலைய வளாகத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக யாத்ரி நிவாஸ் கட்ட நடவடிக்கை: ரயில்வே போர்டு பயணிகள் வசதிகள் மேம்பாட்டு குழு தகவல்

கும்பகோணம்: கும்பகோணம் ரயில் நிலைய வளாகத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக யாத்ரி நிவாஸ் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே போர்டு பயணிகள் வசதிகள் மேம்பாட்டு குழு உறுப்பினர் தெரிவித்தார்.ரயில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்திடவும், கண்காணிக்கவும் ரயில்வே வாரியம் 25 பேர் கொண்ட ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டு குழுவை அமைத்துள்ளது. இக்குழுவை சேர்ந்த ஐதராபாத்தை சேர்ந்த உமாராணி, மேற்கு வங்காளத்தை சேர்ந்த அபிஷேக்தாஸ், கர்நாடகாவை சேர்ந்த மஞ்சுநாத் ஆகியோர் குழுவை சேர்ந்த ரவிச்சந்திரன் தலைமையில், தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு மன்னார்குடி மற்றும் திருவாரூர் ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட இக்குழுவினர் நேற்றுமுன்தினம் சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய ரயில் நிலையங்களில் ஆய்வுக்கு பின்னர் அன்று மாலை இக்குழுவினர், கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்து, அங்கிருந்த குடிநீர் வசதிகள், உணவகம், இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கத்தினரிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றனர்.

ஆய்விற்கு பிறகு இக்குழுவை சேர்ந்த ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாள்தோறும் சராசரியாக 3 ஆயிரத்து 500 பயணிகள் வந்து செல்லும் கும்பகோணம் ரயில் நிலைய வளாகத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக யாத்ரி நிவாஸ் கட்டவும், ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அல்லது லிப்ட் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ரயில் சேவை தொடங்கப்பட்டபோது 30 முதல் 40 சதவீத பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இந்த நிலை மாறி, 80 சதவீதம் அளவிற்கு முன்பு போல ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

எனவே, விரைவில் திருச்சி - விழுப்புரம் இடையிலான மெயின் லைனில் முன்பு இயங்கிய அனைத்து ரயில் சேவைகளும் மீண்டும் கிடைக்க ஆவண செய்யப்படும், 2வது நடைமேடை நீளம் நீடிக்கவும், நிலையத்தில் தேவையான இடங்களில் கூடுதல் விளக்கு மற்றும் மின்விசிறி வசதிகள் செய்து தரப்படும், பல ஆண்டுகளாக பிரச்சனையாக உள்ள கழிவுநீர் குறைபாடுகள் சீர்செய்யப்படும், ஆடுதுறை ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories: