×

கே.வி.குப்பம் அடுத்த சென்னங்குப்பம் பகுதியில் பாலைவனமாக காட்சியளிக்கும் ஏரி

* பாசனம் செய்யமுடியாமல் விவசாயிகள் அவதி
* கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற  கோரிக்கை

கே.வி.குப்பம்: கடந்த மாதத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி வந்தன. இதனால் பல வருடங்களுக்கு பிறகு ஏரி, கண்மாய்கள் நிரம்பி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. பல வருடமாகப் பாலைவனமாகக் காட்சியளித்த, மணல் கொள்ளையில் திளைத்த காட்டாறுகளில் கூட இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் சீறிப் பாய்ந்தன. ஆனால், இவ்வளவு மழை பெய்தும் சில ஏரிகள் நிரம்பாமல் உள்ளது. குறிப்பாக, கே.வி.குப்பம் அடுத்த சென்னங்குப்பம், பி.கே.புரம் ஆகிய ஊராட்சிகளின் இணைக்கும் இடத்தில் செண்ணங்குப்பம் ஏரி ஆக்கிரமிப்புகளால் நிரம்பாமல் சொட்டு நீரின்றி பாலைவனமாக காட்சியளிக்கிறது.  சுமார் 34 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி நிரம்பினால்,
சென்னங்குப்பம், பி.கே.புரம், நீலகண்டபாளயம், புதுப்பேட்டை உள்ளிட்ட 10 குக்கிராமங்களில்  250 ஏக்கர் பாசன வசதி பெறும்.‘

இந்த ஏரிக்கு மோர்தானா இடது புற கால்வாயிலிருந்தும், மலைகளில் இருந்து வரும் ஜவுக்கு நீராலும், தேவரிஷிகுப்பம் ஊராட்சியில் உள்ள  அத்திப்பட்டரை  ஏரியிலிருந்தும் நீர் வரத்து இருந்தது. தற்போது, ஏரிக்கு வரும்  நீர்வரத்து கால்வாய் இருந்த தடம் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், ஏரிக்கு நீர் வருவதில்லை. மேலும், ஏரிக்கு அதிகாரிகள் தண்ணீர் திருப்பி விடாமலேயே  உள்ளனர். அவ்வாறு  திருப்பி விட்டாலும், நீர் செல்ல வழியின்றி ஆக்கிரமிப்புகளால் உள்ளது. இதுேபான்ற காரணங்களால் ஏரி நிரம்பாமல் காணப்படுகிறது. இதன்காரணமாக, விவசாயத்துக்கும் மற்ற தேவைகளுக்காகவும் தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஏரிக்கு வரக்கூடிய கால்வாய் ஆக்கிரமித்து உள்ளதால், இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் பாலைவனம்போல் காணப்படுகிறது. ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டதால், நீர் வரத்து என்பது பல ஆண்டுகளாக சாத்தியமற்றதாக உள்ளது. தற்போது ஏரிக்குள்ளேயும், ஏரியை  சுற்றியும்  மரங்கள்  அடைத்துக் கொண்டிருப்பதாலும், குடிமராமத்து பணி பெயரளவில் நடைப்பெற்றதாலும் ஏரி புதர் மண்டி காட்சியளிக்கின்றது. எனவே ஏரியில் உள்ள மரங்களையும், புதர்களையும் அகற்ற வேண்டும். ஏரியை தூர்வாரி கால்வாயில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றி,   ஏரி நிரம்ப   சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : KV Kuppam ,Chennankuppam , KV Kuppam is a desert lake in the Chennankuppam area next to it
× RELATED கே.வி.குப்பம் அருகே மழையால் வீட்டின்...