மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: ஊரடங்கில் முடங்கிய மாணவர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் முயற்சி

ராமேஸ்வரம்: கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்து இணையவழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட மதுரை பள்ளி மாணவர்கள் நேற்று ராமேஸ்வரம் வந்தனர்.கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டில் இருந்தே இணையவழியில் பாடங்களை படித்து வந்தனர். ஒன்றரை ஆண்டுகளாக இணைய வழியில் கல்வி பயின்ற மாணவர்களை இயற்கை சூழலுக்கு மாற்றி புத்துணர்வு மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் மதுரை பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

மதுரை தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சத்தியநாராயணன் தலைமையில் ஆசிரியர்கள் மதினாபானு, கிஷோர், வனிதா, பாண்டி மற்றும் பிளஸ் 1 வகுப்பை சேர்ந்த 25 மாணவ, மாணவிகள் உட்பட 33 பேர் நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் மதுரையில் இருந்து சைக்கிள் பயணத்தை துவக்கினர். வழியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இக்குழுவினர் நேற்று மாலை 3 மணியளவில் ராமேஸ்வரம் பேக்கரும்பிலுள்ள அப்துல்கலாம் நினைவிடம் வந்தடைந்தனர். கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியவர்கள் மாலை 5 மணிக்கு மேல் மதுரை புறப்பட்டு சென்றனர்.சைக்கிள் பயணத்தில் பங்கேற்ற மாணவர்கள் கூறும்போது, ‘‘எங்களது 12ம் வகுப்பு பாடங்களை அதிக ஈடுபாட்டுடன் கற்றுக்கொள்வதற்கு இந்த விழிப்புணர்வு பயணம் பயனுள்ளதாக இருக்கும்’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: