கோவையில் கல்லூரியில் புகுந்து பீதியை ஏற்படுத்திய சிறுத்தையை பிடிக்க 2 இடங்களில் கூண்டு

கோவை:  கோவை சுகுணாபுரத்தில் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க 2 இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.கோவை வனக்கோட்டம் மதுக்கரை வனச்சரக பகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. வனத்தில் இருந்து அடிக்கடி வெளியேறும் சிறுத்தை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. சமீபத்தில் சுகுணாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. நேற்று முன்தினம் இரவு சுகுணாபுரத்தில் ஒரு நாயை சிறுத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

 சிறுத்தை நடமாட்டம் காரணமாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் பீதி அடைந்துள்ளனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர் வனத்திற்குள் சென்று விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின் பேரில், மதுக்கரை ரேஞ்சர் சந்தியா அறிவுறுத்தலின் பேரில் சிறுத்தையை பிடிக்க 2 இடங்களில் கூண்டு வைத்துள்ளனர். இதுதவிர, 5 இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டம் குறித்து இரவு மற்றும் பகல் நேரத்தில் கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் சிறுத்தை பிடிக்கப்பட்டு அடர் வனத்திற்கு கொண்டு சென்று விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: