சென்னையில் வானிலை கணிப்புகளை மீறி திடீர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவில் நேரில் ஆய்வு

சென்னை : சென்னையில் வானிலை கணிப்புகளை மீறி திடீர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சியில் அரசு விழாவில் பங்கேற்ற பின் விமானத்தில் சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், நேரடியாக மழை பாதிப்புகளை கள ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டார். மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்ற அவர், மழை நீர் தேங்கிய இடங்களின் விவரம் மற்றும் மழைநீரை அகற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கை பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை- பாரிமுனை பகுதிகளில் மழை நீர் சூழ்ந்த இடங்களுக்கு சென்ற அவர், மோட்டார் பம்பு மூலமாக மழைநீரை அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல்வர் ஆய்வின் போது அவருடன் அமைச்சர் சேகர் பாபு, செந்தில் பாலாஜி, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.இதனிடையே முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வானிலைக் கணிப்புகளையும் மீறிக் கொட்டித் தீர்க்கிறது மழை.

எதிர்பாராத மாமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.திருச்சியில் இருந்து திரும்பியவுடன், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்திற்கு வந்து, எடுக்கப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன். நிலைமை விரைந்து சீர்செய்யப்படும்.பொதுமக்களும் கவனமுடன் தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்வதோடு, மழைக்கால வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: