×

அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்த விளங்கும் ஆண்டாக வரும் புத்தாண்டு இருக்கட்டும்: திருச்சி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சி: அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்கக்கூடிய ஆண்டாக வரும் புத்தாண்டு இருக்கட்டும் என திருச்சியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருச்சி, தாயனூர் கேர் கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை அரசு விழா நடந்தது. பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையம் மற்றும் புதிய  திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், நவீனப்படுத்தப்பட்ட சத்திரம் பஸ்  நிலையம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், 45,344 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என ரூ.1,084.80 கோடி மதிப்பிலான புதிய  திட்டங்கள் தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டில் எந்த தனிமனிதனுக்கும் அரசாங்கத்திடமிருந்து கோரிக்கை வைக்க மனு இல்லாத நிலைமையை உருவாக்குவது தான் எனது லட்சியம். அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் அனைத்தும் மக்களிடம் சென்றடைய வேண்டும். அரசிடம் ேகாரிக்கை வைத்தால் நிறைவேறும் என்ற நம்பிக்கையை, சூழலை நாம் உருவாக்க வேண்டும்.  

சில பேர் நினைக்கலாம் இப்பதான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் இப்படி தான் கல்யாணம் ஆன ஜோரு, புதுமாப்பிள்ளை என்று நினைப்பர். உறுதியாக சொல்கிறேன். நாங்கள் எப்போதும் இப்படித்தான் இருப்போம். எந்த நிலையிலும் நாங்கள் பின் வாங்க மாட்டோம்.
தேர்தலுக்கு முன்னால் இதே திருச்சியில் ஒரு பொதுக்கூட்டத்தை மாநாடுபோல் நம்முடைய அமைச்சர் நேரு நடத்தினார். அந்த கூட்டத்தில் நான் வழங்கிய ஏழு உறுதிமொழிகள் படிதான் இன்று ஆட்சி நடக்கிறது. வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு! மகசூல் பெருக்கம். மகிழும் விவசாயி! குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்! அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் மருத்துவம்! எழில் மிகு மாநகரங்களின் மாநிலம்! உயர்தர ஊரக கட்டமைப்பு உயர்தர வாழ்க்கைத்தரம்! அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்! இவற்றை தான் நான் எனது ஏழு உறுதிமொழிகளோடு குறிப்பிட்டு ெசான்னேன்.

இந்த ஆறு மாத காலத்தில் ஏராளமான புதிய தொழில்களை உருவாக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. அதனால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறப்போகிறார்கள். தமிழகத்தில் தொழில் வளர்ச்சி என்பது மிகப்பெரிய இலக்கை எட்ட உள்ளது. தொழில் வளர்ச்சிக்கு தரக்கூடிய அதே முக்கியத்துவத்தை சமூக வளர்ச்சிக்கும், வாழ்க்கைத்தர மேம்பாடு, பெண்களுக்கான மேம்பாடுக்கும் வழங்கத் துவங்கி உள்ளோம். தமிழ்நாட்டு மக்களே உங்கள் கோரிக்கைகளை எங்கள் தோளிலே இறக்கி வையுங்கள் அவற்றை நிறைவேற்றிக்காட்டுவோம். நாளை மறுநாள் (நாளை) 2022 புதிய ஆண்டு பிறக்கிறது. ஆக புதிய ஆண்டு பிறக்கையில் நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், 2021 முடிந்து 2022 அடுத்த ஆண்டாக பிறப்பதாக கருத வேண்டாம். கடந்த கால சுமைகள், சோகங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து, சிறப்பான ஆண்டு பிறக்கப்போகிறது. மக்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும் ஆண்டாக 2022 அமையட்டும்.

அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்த விளங்கக்கூடிய ஆண்டாக இருக்கட்டும். இந்தியாவிலே இருக்கக்கூடிய மாநிலங்களையெல்லாம் ஒப்பிட்டுப்பார்த்து முதல்வர்களில் தமிழ்நாட்டில் உள்ள மு.க.ஸ்டாலின் சிறந்த முதல்வர் என்று குறிப்பிட்டனர். அதைக் காட்டிலும், இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் நமது தமிழ்நாடு முதலிடம் என்று சொல்லக்கூடிய நிலை வந்தால் தான் எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சி வந்து சேரும். ஆகவே 2022ம் ஆண்டை சிறந்த ஆண்டாக ஆக்குவதற்கு நமது அரசு தொடர்ந்து தன்னுடைய கடமையை ஆற்றும். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Tamil Nadu ,New Year ,Chief Md ,Tirichi Festival ,KKA ,Stalin , May the coming New Year be a year of excellence for Tamil Nadu in all fields: Chief Minister MK Stalin's speech at the Trichy function
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...