×

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: ஒன்றிய அரசிடம் தமிழக எம்பி.க்கள் மனு

புதுடெல்லி: தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. கடந்த மாதம் தமிழக ஆளுநரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு விரைவாக அனுப்பம்படி கோரிக்கை வைத்தார்.

நாடாளுமன்றத்திலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி கூட்டாக வலியுறுத்தின. இந்நிலையில், டெல்லியில் தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள்  ஜனாதிபதி அலுவலகத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும்படி கோரி கடந்த 28ம் தேதி மனு  வழங்கினர். அது உடனடியாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நேரில் வலியுறுத்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நேரம் கேட்கப்பட்டது. ஆனால், உத்தரப்பிரதேச தேர்தல் பணியில் அவர் இருந்து வருவதால் நேரம் வழங்கவில்லை.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கொண்ட மனுவை ஒன்றிய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நேற்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் வழங்கினர். பின்னர், டி.ஆர்.பாலு அளித்த பேட்டியில், “நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னும் ஜனாதிபதிக்கு அனுப்பப்படாமல் ஆளுநர் இல்லத்தில் இருக்கிறது. சட்டப்படி அவர் அனுப்பி இருக்க வேண்டும். இதுசார்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெளிவாக வழங்கியுள்ளது. கடந்த 28ம் தேதியும் இது குறித்த கோரிக்கை கொண்ட மனுவை ஜனாதிபதி அலுவலகத்தில் கொடுத்தோம்.

அதன் தொடர்ச்சியாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டோம். ஆனால், அவரது தொடர் பணியின் காரணத்தால் பார்க்க முடியவில்லை. வேறொரு நாளில் நேரம் கேட்டுள்ளோம். அப்போது நீட் தேர்வு ரத்து குறித்து அவரிடம் எடுத்துரைப்போம். இந்த தேர்வால் தமிழகத்தில் இதுவரை 13  மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்,’’ என்றார். இந்த சந்திப்பில் அதிமுக சார்பில் நவநீத கிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன், இடதுசாரிகள் கட்சி சார்பில் சு.வெங்கடேசன் மற்றும் செல்வராஜ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி  நவாஸ்கனி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Tamil Nadu ,Union Government , Need to approve exemption bill: Tamil Nadu MPs petition to the Union Government
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...