×

மதுரை சிறை கண்காணிப்பாளர் கடலூருக்கு அதிரடியாக மாற்றம்: ரகளையில் ஈடுபட்ட 18 கைதிகள் மீது வழக்கு

மதுரை: மதுரை சிறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் அதிரடியாக கடலூருக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி கூடுதல் கண்காணிப்பாளர் மதுரைக்கு நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையே, ரகளையில் ஈடுபட்ட 19 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை மத்திய சிறையில் கண்காணிப்பாளராக இருந்தவர் தமிழ்ச்செல்வன். சில மாதங்களுக்கு முன்பு மதுரை மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டார். அவர் பொறுப்பேற்பதற்கு முன்பே மதுரை சிறைச்சாலையில் கைதிகளால் தயாரிக்கப்பட்டு, விற்கப்படும் பொருட்களில் பல கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. தவறுகளில் இருந்து தப்பிக்கும் வகையில் ஆவணங்களும் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. இதன்பேரில் சிறைத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் மதுரை சிறைக்குள் கைதிகள் ரகளையில் ஈடுபட்டனர். மதுரை, திருமங்கலம் தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆதிநாராயணன், திருச்சியைச் சேர்ந்த ஜெகன் ஆகியோர் இருவேறு வழக்குகள் தொடர்பாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இரு தரப்பினருக்குள் சிறைக்குள் மோதல் இருக்கிறது. தன்மீது எதிர்தரப்பினர் தாக்குதல் நடத்த இருப்பதாக ஆதிநாராயணன் புகாரில், இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், எஸ்ஐகள் ஜெயராஜ், சந்திரன், சிறை அதிகாரி ராமபிரபா ஆகியோர், எதிர்தரப்பைச் சேர்ந்த ஜெகன், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
 
இதனை கண்டித்து நேற்று முன்தினம் இவர்களது ஆதரவாளர்கள் திடீரென கட்டிடத்தின் மாடிச்சுவர் மீது ஏறி நின்று கோஷங்கள் எழுப்பி, கற்கள், பாட்டில்களை புது ஜெயில் ரோட்டை நோக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் இவர்களை அறைக்குள் அடைத்தனர். இதற்கிடையில் ஜெகன், சந்திரபோஸ் ஆகியோரிடம் சிறை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் 30 கிராம் அளவிற்கான கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிந்து, பறிமுதல் செய்யப்பட்டது. இதன்பேரில் 2 பேர் மீதும் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக கரிமேடு போலீசார் வழக்குப்பதிந்து, கைது செய்தனர்.

இதுதவிர, நேற்று முன்தினம் சிறைக்குள் ரகளையில் ஈடுபட்ட 19 கைதிகள் மீது 3 பிரிவுகளின் கீழ் கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மதுரை மத்தியச் சிறையில் இப்படி அடுத்தடுத்து பிரசனைகள் எழுந்ததால் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், கடலூர் மத்திய சிறைக்கு அதிரடியாக நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் ஏடிஎஸ்பியாக இருந்த வசந்த் கண்ணன்,  மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு, நேற்று காலை இவர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

Tags : Madurai Prison ,Kadalore , Madurai Prison Superintendent transferred to Cuddalore: Case filed against 18 inmates involved in riots
× RELATED கடலூர் அருகே தூக்கில் கல்லூரி மாணவி சடலம்