×

அரபாத் ஏரிக்குள் வீசப்பட்ட இறந்த கோழி இறைச்சி மூட்டைகள் அகற்றம்

ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில், சிடிஎச் சாலையை ஒட்டி 65 ஏக்கர் பரப்பளவில் அரபாத் ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி மணிகண்டபுரம், சரவணா நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. ஆரம்ப காலத்தில், இப்பகுதி மக்களுக்கு இந்த ஏரியின் தண்ணீர் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியது. நாளடைவில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரியில் கலந்து, குடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், ஏரி கழிவுநீர் குட்டையாக மாறியது.

இந்நிலையில், ஏரி நீர் மாசடைந்தது மட்டுமின்றி, வீடுகளில் உள்ள கழிவுப் பொருட்களை, பொதுமக்கள் சிலர் அடிக்கடி வீசி வந்தனர். இதனால், ஏரி பாழாகி வந்தது. இதற்கிடையில், கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவில், ஏரி தண்ணீரில் இறந்த கோழிகளை மூட்டை, மூட்டையாக சமூக விரோதிகள் வீசி சென்றனர். இதனால், ஏரியில் தண்ணீர் துர்நாற்றம் வீசியது. மேலும், ஏரியை சுற்றி குடியிருக்கும் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. சிடிஎச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் துர்நாற்றத்தால் அவதிப்பட்டனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இந்நிலையில், ஆவடி மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு, தூய்மை பணியாளர்கள் மூலம் ஏரியில் மிதந்து கொண்டிருந்த  கோழி மூட்டைகளை  அப்புறப்படுத்தினர். பின்னர்  அதனை சேக்காட்டில் உள்ள குப்பை கிடங்கில் குழி தோண்டி புதைத்து அழித்தனர். ஏரியில் வீசப்பட்ட இறந்த கோழி மூட்டைகளை அப்புறப்படுத்திய அதிகாரிகளுக்கும், உறுதுணையாக இருந்த தினகரன் நாளிதழுக்கும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.


Tags : Lake Arabad , Disposal of dead chicken meat bundles thrown into Arafat Lake
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக...