சொன்னதையும் செய்யும் சொல்லாததையும் செய்யும் நம் தமிழக அரசு: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம், கீழ்மணம்பேட்டில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, சுகாதாரத் துறை துணை இயக்குநர் செந்தில்குமார், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு,  ஒன்றிய குழுத் தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் முகாமை துவக்கி வைத்து, பேசியதாவது. முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் வருமுன் காப்போம் என்ற திட்டமாக புதுப்பொலிவுடன் தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிட்டு, அதனை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள 385 வட்டாரங்களில், தலா வட்டாரத்துக்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம் 1155 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு என சொன்னதையும் செய்கின்ற அரசாகவும், சொல்லாததையும் செய்யும் அரசாகவும் நம் தமிழக அரசு திகழ்கிறது. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் பல்வேறு சிறப்பு மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு அளிக்கப்படுகிறது.

சிறப்பு மருத்துவர்களால் நோயை கண்டறிந்து அதற்கான முதல் கட்ட சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சை மற்றும் தொடர் நடவடிக்கைக்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெற வழிவகை செய்யப்படும். இச்சேவைகள் மூலமாக சுகாதார விழிப்புணர்வு, கல்வி வாயிலாக உடல்நல மேம்பாடு, தனிநபர் ஆரோக்கியம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மேம்படுத்தப்படும்.

மேலும், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெறும் மருத்துவ முகாம்களில் பல்வேறு பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. எனவே, இந்த முகாமை பொதுமக்கள் அனைவரும், தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தங்களை தாங்களே தற்காத்து கொண்டு, சுகாதாரமான முறையில் வாழ வேண்டும் என்றார். தொடர்ந்து, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணியாற்றும் 20 பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு தலா ₹17,500 வீதம் ₹3.5 லட்சம் மதிப்பீட்டில் கையடக்க கணினிகளை வழங்கினார்.

*அரசு பள்ளி அருகே டாஸ்மாக் கடை

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் சென்னீர்குப்பம் ஊராட்சியில் ₹25 லட்சத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.  இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை அமைச்சர் சா.மு. நாசர் திறந்து வைத்தார். உடன் கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், எம்எல்ஏ கிருஷ்ணசாமி, மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி, பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் ஜெயக்குமார், துணை சேர்மன் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் டில்லிபாபு, கன்னியப்பன், ஊராட்சி மன்ற தலைவர் கோட்டீஸ்வரி அன்பு உள்பட பலர் இருந்தனர்.

முன்னதாக, அமைச்சர் வந்தபோது, அப்பகுதி மக்கள், அவரது காரை நிறுத்தி மனுக்கள்  கொடுத்தனர். அதில், சென்னீர்குப்பம் அரசு மேல்நிலை பள்ளி முன்பு போலீஸ் சோதனைச்சாவடி, பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு கடந்த 3 மாத காலமாக சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அரசு பள்ளி அருகே டாஸ்மாக் கடை இயங்குகிறது.

அந்த கடையை மூட வேண்டும், கழிவுநீரை அப்புறபடுத்த வேண்டும் என அப்பகுதி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், வெற்றிலை தோட்டம் பஸ் நிறுத்தத்தில், அரசு பேருந்துகள் நிற்காமல் செல்கிறது என கூறப்பட்டு இருந்தது. அந்த மனுக்களை பெற்று கொண்ட அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு 3 பணிகளையும் உடனடியாக செய்து முடிக்கும்படி உத்தரவிட்டார்.

Related Stories: