1,000ஐ நெருங்கியது ஒமிக்ரான்; டெல்லியில் சமூக பரவல்

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 180 பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 961 ஆக உயர்ந்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான், மிக வேகமாக 100க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்து வருகிறது.

இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவுகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று காலை நிலவரப்படி 961ஆக அதிகரித்து உள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக டெல்லியில் 263, மகாராஷ்டிராவில் 252, குஜராத்தில் 97, ராஜஸ்தானில் 69, கேரளாவில் 65, தெலங்கானாவில் 62 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கையில் டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் மட்டும் 50 சதவீதமாக உள்ளது. ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 320 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,154 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 82,402 ஆக உள்ளது. இதுவரை நோய்த் தொற்றால் 4,80,860 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், ``சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்ட 115 கொரோனா மாதிரிகளில் 46 சதவீத மாதிரிகளில் ஒமிக்ரான் வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்களில் பலர் எந்தவிதமான பயண வரலாறும் இல்லாதவர்கள் ஆவர். இந்த மாறுபாடு படிப்படியாக சமூகத்தில் வேகமாக பரவுகிறது. இதன் பரவல் விகிதம் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும். ஏனென்றால், ஒமிக்ரான் தொற்று தற்போது சமூக பரவலாக மாறி வருகிறது,’’ என்று தெரிவித்தார்.

Related Stories: