ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொலை: ராணுவ வீரர் வீர மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நவ்காம் ஷஹாபாத் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வீரர்கள் அங்கு விரைந்தனர். அப்போது, தீவிரவாதிகள் திடீரென வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். வீரர்கள் நடத்திய பதிலடியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 3 வீரர்களும், ஒரு போலீஸ்காரரும்  காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதேபோல், குல்காம் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் 3  தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்களும் ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள்தான். ஜம்மு காஷ்மீரில் கடந்த 1990ம் ஆண்டுகளில் தீவிரவாதம் தலை தூக்கியது. அப்போது, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளால் உள்ளூரில் தேர்வு செய்யப்பட்ட ஏராளமான இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறினார்கள். பாதுகாப்பு படைகள் எடுத்து வரும் நடவடிக்கையால், தீவிரவாதிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 200 ஆக குறைந்து இருப்பதாக ராணுவம் நேற்று தெரிவித்தது.

Related Stories: