×

திருமணம் செய்யுமாறு தொடர்ந்து மாணவிக்கு டார்ச்சர் கொடுத்த கல்லூரி ஊழியர் குத்திக்கொலை: காதலனுடன் மாணவி கைது; திருப்போரூர் அருகே பயங்கரம்

சென்னை: திருமணம் செய்யுமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்த கல்லூரி ஊழியரை காதலனை வைத்து தீர்த்துக்கட்டிய கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்தனர். திருப்போரூர் அருகே நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கீழ் பென்னாத்தூரை அடுத்த திடீர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். விவசாயி. இவரது மகள் தேசப்பிரியா (23). கடந்த ஆண்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். அப்போது, அதே பல்கலைக்கழகத்தில் சோதனைக்கூடம் ஒன்றில் உதவியாளராக இருந்த மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் (43) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது, மாணவி தேசப்பிரியாவிடம் கல்லூரி ஊழியர் செந்தில், காதலிப்பதாக கூறி உள்ளார். ஆனால், செந்திலுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியிருப்பதும், குழந்தை இல்லாததால் மனைவியை பிரிந்து தனியே வசிப்பதும் தேசப்பிரியாவுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, அவரது காதலை ஏற்க முடியாது என்று கூறி அவரை திட்டி உள்ளார். இந்நிலையில், 3 ஆண்டுகள் படிப்பு முடிந்து விட்டநிலையில் உயர் படிப்பு படிப்பதற்காக திருப்போரூர் அடுத்த காலவாக்கத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு ஒன்றில் சேர்ந்துள்ளார்.

மேலும், அவர் காட்டாங்கொளத்தூர் தனியார் பல்கலைக்கழகத்தில் படித்தபோது உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ஆராய்ச்சி மாணவரான அருண்பாண்டியன் (24) என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே தேசப்பிரியா, திருப்போரூர் அருகே கல்லூரியில் படிப்பதை அறிந்த , செந்தில் அதே கல்லூரியில் கடந்த 2 மாதங்களுக்க முன்பு பணியில் சேர்ந்துள்ளார்.அப்போது, காட்டாங் குளத்தூரில் படித்தபோது நெருங்கமாக இருந்த போட்டோக்களை வைத்து கொண்டு அந்த மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து தேசப்பிரியா தனது காதலர் அருண்பாண்டியனிடம் தெரிவித்து அழுதுள்ளார். செந்தில் தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி வற்புறுத்துவதாகவும், டார்ச்சர் தாங்க முடியவில்லை என்றும் கூறி அழுதுள்ளார்.

இதனால், இருவரும் சேர்ந்து நேற்று முன்தினம் கேளம்பாக்கத்தில் சந்தித்து பேசி உள்ளனர். செந்திலை வரவழைத்து பேசுவது என்றும் டார்ச்சர் தொடரும் பட்சத்தில் கொலை செய்வது என்றும் முடிவு செய்து அங்கேயே ஒரு கடையில் கத்தி வாங்கி உள்ளனர். நேற்று காலை செந்திலுக்கு போன் செய்து பேசிய தேசப்பிரியா, உணவு இடைவேளையின்போது தான் கல்லூரியை விட்டு வெளியே வருவதாகவும், சந்தித்து பேசலாம் என்றும் கூறி உள்ளார். இதை நம்பி, செந்தில் கல்லூரிக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் காத்திருந்தார். பிற்பகல் 2 மணியளவில் கல்லூரியை விட்டு வெளியே வந்த தேசப்பிரியா தனியாக நின்றிருந்த செந்திலை சந்தித்து பேசி உள்ளார். சிறிது நேரத்தில் அங்கு அருண்பாண்டியனும் வந்துள்ளார். நாங்கள், இருவரும் காதலிக்கிறோம், எங்களை தொல்லை செய்ய வேண்டாம் என்றும் கூறி உள்ளனர்.

இதில், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உன்னை அடையாமல் விட மாட்டேன் என்று செந்தில் கூறியபடி தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு செல்ல முயன்றார். இதனால், ஆத்திரம் அடைந்த அருண்பாண்டியன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்திலின் கழுத்தை திடீரென அறுத்துள்ளார். இதனால், நிலை குலைந்த செந்தில் வாகனத்தில் உட்கார்ந்தபடி சாய்ந்தார். உடனே அருண்பாண்டியன் தனது கையில் வைத்திருந்த கத்தியால் அவரது மார்பில் இரண்டு இடங்களில் குத்தினார். இதனால் அதே இடத்தில் துடிதுடித்து செந்தில் உயிரிழந்தார்.

உடனே தேசப்பிரியாவும், அருண்பாண்டியனும் அவ்வழியே வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி கேளம்பாக்கம் செல்ல முற்பட்டனர். ஆனால், ஆட்டோவில் இருந்தவர்கள் அருகில் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து, இவர்கள் இருவரையும் பிடித்துக் கொண்டனர். பின்னர், கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் வந்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட செந்திலின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து தேசப்பிரியா மற்றும் அருண்பாண்டியன் ஆகிய இருவரையும் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Thiruporur , College employee stabs student to death for marrying student
× RELATED செங்கை கலெக்டர் துவக்கி வைத்தார்;...