இரவில் தேவையின்றி வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் மரபியல் மாற்றமடைந்த ஒமிக்ரான் வகை தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து, பாதுகாப்பு வழிமுறைகள் முழுமையாக கடைபிடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

பின்னர் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்கனவே  கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் விதிமீறல் இருக்கிறதா என  கண்காணிக்க, மண்டலத்திற்கு, மூன்று அமலாக்க குழுக்கள் நியமிக்கப்படுகிறது.  இந்த குழுவினர், இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மக்கள்  அதிகம் கூடக்கூடிய இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். மேலும்,  கடைகள் இரவு 11 மணிக்குள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடைக்கு வருபவர்கள் திரும்ப, 12 மணி வரை நேரம் ஒதுக்கப்படுகிறது. அதன்பின், வருவோர்  தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவர். பிற அத்தியாவசிய தேவைகளுக்கு  கட்டுப்பாடு இருக்காது. அதேவேளையில், தேவையின்றி வெளியே வந்தவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும். வழிபாட்டு தலங்களுக்கு செல்பவர்களும்  சோதனைக்கு பின்தான் அனுமதிக்கப்படுவர். இதனால், அவர்களுக்கு கால விரயம்  ஆகலாம் என்றார்.

Related Stories: